“சண்டை போடாதிங்க.. வாழ்க்கை ரொம்ப சின்னது!” - ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்!
விடாமுயற்சி, குட் பேட் அக்லி முதலிய இரண்டு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து முடித்த நடிகர் அஜித்குமார், படப்பிடிப்பு வேலைகளை முடித்தபிறகு துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள புறப்பட்டுச்சென்றார்.
சமீபத்தில் ’அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் ரேஸிங் அணியை உருவாக்கிய நடிகர் அஜித்குமார், தன்னுடைய அணியுடன் சேர்ந்து அடுத்தடுத்து நடக்கவிருக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியானது.
துபாயில் நடைபெற்றுவரும் 24H கார் ரேஸில் அஜித்குமார் அணியுடன் கலந்துகொண்ட அஜித்குமார் பேசுகையில், கார் பந்தயங்கள் நடைபெறும் காலங்களில் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும், ரேஸ் இல்லாத அக்டோபர்-மார்ச் இடையேயான காலகட்டத்தில் படத்தில் நடிக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் பயிற்சியின் போது அஜித்திற்கு விபத்து ஏற்பட்டதை சுட்டிக்காட்டியிருக்கும் அணிக்குழு, துபாய் 24H கார் ரேஸில் அஜித்குமார் முழுமையான ஓட்டுநராக பங்கேற்க மாட்டார் என்றும், குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அஜித்குமார் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதை பார்ப்பதற்காக நேராக துபாய்க்கே சென்ற அஜித் ரசிகர்கள் அவருக்கு உற்சாகத்தை அளித்தனர்.
ரசிகர்களுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்..
ரசிகர்கள் குறித்து பேசிய அஜித்குமார், “நிறைய ரசிகர்கள் நேர்ல வந்திருந்தாங்க, அதை பார்க்கும் போது எமோசனலா இருக்கு. நான் உங்களுக்கு ஒன்னு மட்டும்தான் சொல்லிக்க விரும்புறன், நீங்க மன நிம்மதியோட, நிறைஞ்ச ஆரோக்கியத்தோட வாழனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறன். எப்பவும் உங்களுடைய கும்பத்தை பாருங்க, நல்லா படிங்க, வேலைக்கு போறவங்க கடுமையாக உழைச்சு வேலைப்பாருங்க.
நமக்கு புடிச்ச விஷயத்துல கலந்துகிட்டு வெற்றியடைஞ்சா சந்தோஷம்தான், ஒருவேளை தோல்வியடைஞ்சா சோர்ந்து போயிடாதிங்க. தோற்குறோமோ, ஜெயிக்கிறோமோ போட்டிப்போடுறது ரொம்ப முக்கியம். மன உறுதி, அர்ப்பணிப்பு இரண்டையும் எப்பவும் விட்டுக்கொடுக்காதிங்க. எல்லோருக்கும் லவ் யூ!” என்று பேசினார்.
மேலும் இறுதியாக “டியர் ஃபேன்ஸ்... சண்டைபோடாதீங்க, வாழ்க்கை மிகவும் சிறியது, எல்லோரும் சந்தோஷமா இருங்க. மறுபடியும் சொல்றன் உங்க குடும்பத்தை பாருங்க, குடும்பத்தை பாருங்க” என்று கூறியுள்ளார்.