மாநகரம் படம் மூலம் அறிமுகமாகி இன்று முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். கைதி படம் மூலம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவருக்கு, விஜய் தன்னுடைய படத்தை இயக்க வாய்ப்பளித்தார். மாஸ்டர் என்ற பிளாக் பாஸ்டர் படத்தை கொடுத்தார் லோகேஷ்.
கமல்ஹாசன் ரசிகரான லோகேஷுக்கு, கமல் படம் இயக்கம் வாய்ப்பு விக்ரம் மூலம் அமைந்தது. அந்தப் படமும் மிகப்பெரிய ஹிட்டானது. இதிலிருந்து LCU என்ற யுனிவர்ஸ் உருவாக்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். விரைவில் விக்ரம் 2, கைதி 2, ரோலக்ஸ் என இந்த யுனிவர்சில் அடுத்த படங்கள் உருவாகும் எனவும் கூறினார் லோகேஷ். இதனையடுத்து விஜயுடன் மறுபடி இணைந்து `லியோ' படத்தை கொடுத்தார்.
தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார். இதன் வேளைகளில் பரபரப்பாக இருந்தவர் சமீபத்தில் துபாயின் நடைபெற்ற பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஷயங்கள் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்வில் கூலி படத்தின் அப்டேட் கேட்கப்பட, "கூலி படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்தது. 30% மட்டும் பாக்கி இருக்கிறது. 4,5 மாதங்களாக இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்தது. ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு மீண்டும் துவங்கும் படப்பிடிப்பு பிரேக் இல்லாமல் நடக்கும்" என்றார்.
மேலும் கூலி படத்தின் ஃப்ரஸ்ட் லுக் புர்ஜ் கலிஃபாவில் வருமா எனக் கேட்டபோது, "கண்டிப்பாக வரும், விக்ரம் சமயத்திலேயே முயற்சி செய்தோம், கண்டிப்பாக கூலியில் மிஸ் பண்ணாமல் செய்வோம். எனக்கும் எங்களுடைய பெயரை எல்லாம் அதில் பார்க்க வேண்டும் என ஆசை." என்றார்.
கடைசியாக எல்லா பெரிய ஹீரோக்களுடனும் வேலை செய்து விட்டீர்கள், AK சாருடன் எப்போது வேலை செய்வீர்கள் எனக் கேட்கப்பட்ட போது "எல்லார் போலவும் எனக்கும் AK சாருடன் பணியாற்ற ஆசை. கூடிய சீக்கிரம் நடக்கும் என நினைக்கிறேன்." எனக் கூறினார். ரஜினி, கமல், விஜய் என முன்னணி நட்சத்திரங்களை இயக்கிய லோகேஷ் யூனிவர்சில் அஜித்தும் இணைவாரா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.