திருச்சி | ஜல்லிக்கட்டு காளையுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்.. களை கட்டிய மாணவர்களின் பொங்கல் விழா!
ஜல்லிக்கட்டு காளையுடன் கல்லூரிக்கு வந்த மாணவர் - பொங்கல் கொண்டாட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்யம்!
திருச்சி தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் இணைந்து துறை வாரியாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.
மண் பானையில் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டும், கரும்பு தோரணங்கள் கட்டியும், உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் வைத்தும் சிறப்பாக கொண்டாடினர்.
பறை இசை முழங்க நடனமாடி, உற்சாகத்துடன் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் .
அக்கல்லூரியின் தமிழாய்வுத் துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் ஆவூரை சேர்ந்த சேது மாதவன் ஜல்லிக்கட்டு காளைகளை வீட்டில் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழரின் பண்பாட்டை உணர்த்தும் விதமாக, தான் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளையை பொங்கல் விழாவில் பங்கேற்க அழைத்து வந்தார்.
திமிலுடன் கம்பீரமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு காளை மாணவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றனர். கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் ஜல்லிக்கட்டு காளைக்கும், மாணவனுக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தனர்.
இது தொடர்பாக மாணவர் சேது மாதவன் பேசுகையில்... நாங்கள் ஜல்லிக்கட்டு காளையை வீட்டில் வளர்த்து வருவதாகவும், தமிழரின் பண்பாடான பொங்கல் திருவிழா கல்லூரியில் கொண்டாடப்படும் நிலையில், கல்லூரிக்கு காளையை அழைத்து வரவேண்டும் என ஆசை கொண்டு, ஆசிரியர்களிடம் அனுமதி பெற்று காளையை கொண்டு வந்ததாகவும், பல்வேறு ஜல்லிக்கட்டு களம் காணும் காளைகளை கல்லூரிக்கு அழைத்து வந்தது மகிழ்ச்சி தருவதாக உள்ளதாக தெரிவித்தார்.
தமிழர்களின் பண்பாடை உணர்த்தும் விதமாக பொங்கல் திருவிழா கல்லூரி முழுவதும் நடைபெற்று வருவதாகவும், மாணவர்கள் உற்சாகத்துடன் இருக்கும் நிலையில், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் தெரிவித்தார்.