அஜித்குமார் ரேஸிங் எக்ஸ் தளம்
சினிமா

முதல்வர், துணை முதல்வர் குறித்து அஜித் சொன்ன வார்த்தை... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

“சென்னையில் நடைபெற்ற night racing, இந்தியாவில் கார் ரேஸிங்கில் ஈடுபடுவோரை ஊக்கப்படுத்தும் விதமாக இருந்தது. அந்த ரேஸிங்கை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியின் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது” என்று அஜித் பாராட்டு.

Uvaram P

சினிமாவைத் தாண்டி, தான் பெரிதும் நேசிக்கும் ரேஸிங்கில் களமிறங்கியிருக்கும் நடிகர் அஜித்குமார், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனது அனுபவங்களையும், ரசிகர்களுக்கான அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். துபாயில் அவரது ரேஸிங்கிற்காக பயிற்சி செய்ய துவங்கியதில் இருந்து, அவர் தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இதனால், ‘மனுஷன இவ்ளோ உற்சாகமா பார்த்ததே இல்ல’ என்ற அளவில் பல கமெண்ட்டுகளும் பறந்தன. இந்த நிலையில்தான், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், துணை முதல்வர் உதயநிதி குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் அஜித்குமார்.

கார் ரேஸிங்கில் நடிகர் அஜித்

திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகர் அஜித், இரண்டு படங்களை நடித்து முடித்து ரேஸிங்கில் களமிறங்கியுள்ளார். அவரது ‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6லும், ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 14-ம் தேதியை ஒட்டியும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையேதான், சிறுவயதில் இருந்தே தான் பெரிதும் நேசிக்கும் ரேஸிங்கில் குதித்திருக்கிறார் அஜித்.

இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் அணியை உருவாக்கியவர், அடுத்த ஒன்பது மாதங்களுக்கு Full fledged ஆக ரேஸிங்கில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறார். இந்த காலகட்டத்தில், படங்களில் நடிப்பதில்லை என்றும் முடிவெடுத்திருக்கிறார். முன்னதாக, துபாயில் நடைபெற்ற ரேஸிங்கில் பங்கேற்ற அஜித்தின் அணி, மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியது. அவருக்கும், அணியினருக்கும் பலரும் வாழ்த்துகளை கூறியிருந்தனர்.

கார் ரேஸிங்கில் கலந்துகொண்ட பின் நடிகர் அஜித் பேட்டி

இந்த நிலையில்தான், ரேஸிங்கில் ஈடுபட்டதில் இருந்து அடுத்தடுத்து நேர்காணல்களை கொடுத்து வருகிறார் அஜித். இதில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், தமிழக அரசின் செயல்பாட்டையும் பாராட்டியுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பின் முன்னெடுப்பில், சென்னையில் Formula 4 Racing நடத்தப்பட்டது. கச்சிதமான ஏற்பாடுகளோடு நடந்து முடிந்த இந்த ரேஸிங் பாராட்டையும் பெற்றிருந்தது. குறிப்பாக, சென்னை சாலையில் கார்கள் சீறிப்பாய்ந்த காட்சிகள் தேசிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது.

இந்த நிலையில்தான், சென்னையில் நடைபெற்ற இந்த night racing, இந்தியாவில் கார் ரேஸிங்கில் ஈடுபடுவோரை ஊக்கப்படுத்தும் விதமாக இருந்ததாகவும், இந்த ரேஸிங்கை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியின் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது என்று அஜித் பாராட்டு தெரிவித்துள்ளார். அத்தோடு தனக்கு ஆதரவளித்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் நன்றி என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவரது ரேஸிங் உடையில் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை இடம்பெறச் செய்த அஜித், ரேஸிங்கில் ஈடுபட்டபோது அதனை எடுத்துக் காட்டியதும் கவனம் ஈர்த்திருந்தது.

தேசிய கொடியை ஏந்தி மகிழ்ச்சி தெரிவித்தது, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை காட்டியது என, அவரது செயல்பாடுகள் பாராட்டைப் பெற்றன. இந்நிலையில், சென்னையில் நடத்தப்பட்ட Formula 4 Racing-ங்கிற்காக பாராட்டு தெரிவித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.