நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில், சிறப்பு விசாரணை குழுவினர் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை நேற்று கைது செய்திருந்தனர். தொடர்ந்து அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்மீது பி.என்.எஸ் 75 (4), 67 பிரிவுகளில் வழக்கு பதிவிடப்பட்டுள்ளன. இவை யாவும் ஜாமீன் பெற முடியாத பிரிவுகள் என்றபோதிலும், அவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக விசாரணையின்போது, “நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறான நோக்கத்தில் நான் எதையும் சொல்லவும் இல்லை” என பேசியிருக்கிறார் பாபி செம்மனூர். ஊடகங்களிடம் பேசுகையிலும், தான் பேசியவை இரட்டை அர்த்தத்தில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றே அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ஹனி ரோஸ், தனது புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்தி அவதூறான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி 20 யூடியூபர்கள் மீது புகார் அளித்துள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் பொருத்தமற்ற படங்கள் மற்றும் தவறான தலைப்புகளைப் பயன்படுத்தியதாக அந்த யூடியூபர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார் ஹனி ரோஸ். காவல்துறையினர் அந்த யூ-ட்யூபர்கள் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இப்புகார் தொடர்பாக செய்தி சேனல் ஒன்றில் பேசிய ராகுல் ஈஷ்வர் என்பவர், நடிகை ஹனி ரோஸை விமர்சித்ததாக தெரிகிறது. குறிப்பாக ஹனி ரோஸின் உடையை விமர்சித்து பேசியுள்ளார். இதனால் அவரை குறிப்பிட்டு ஹனி ரோஸ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஹனி ரோஸ், “ராகுல் ஈஷ்வர் அவர்களே... உங்களுடைய மொழித்திறன் உண்மையிலேயே என்னை வியக்க வைத்தது.
பொதுவாக ஒரு விவாதம் என்று வருகையில் இரு தரப்பிலிருந்தும் கருத்துகள் முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் நீங்கள் பங்கேற்கின்றீர்கள் என்றால், ஒருபக்கம்தான் அந்நிகழ்ச்சி செல்லும். அதனால் அதன் முடிவு என்ன என்பதை மக்கள் எளிதில் யூகித்துவிடலாம். இதுபோன்ற காரணங்களால் நீங்கள் இருக்கும் நிகழ்ச்சியில் பெண்கள் எவ்வளவு பெரிய பிரச்னையை முன்வைத்தாலும், உங்களின் அசாதாரண மொழி அறிவு மற்றும் மொழி கட்டுப்பாட்டின் மூலம் அவற்றை நடுநிலையாக்குவது போல பேசிவிடுவீர்கள்.
தாந்திரி குடும்பத்தை சேர்ந்த நீங்கள் (ராகுல் ஈஷ்வர்), சாமியாராகாமல் இருப்பது நல்லதுதான். ஏனெனில் நீங்கள் சாமியாரானால், நீங்கள் பணி செய்யும் கோயிலில்கூட பெண்கள் என்ன உடை அணிய வேண்டுமென்று விதிகள் வகுத்திருப்பீர்கள்.
எந்த மாதிரியான உடை உங்கள் சுயக்கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் என்பதை யார் கணிக்க முடியும்?
மொழி மீதான உங்கள் கட்டுப்பாடு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், பெண்களின் ஆடை விஷயத்தில் அது தடுமாறி விடுகிறதுதான். ஒருவேளை நான் உங்களை நேரில் தனிப்பட்ட முறையில் சந்தித்தால் நிச்சயம் இதை என் நினைவில் வைத்தே பேசுவேன்” என்றுள்ளார்.