”நம் உலகம் வேறு.. அவர் உலகம் வேறு” என இளையராஜாவின் பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சிம்பனி சிகரம் தொட்ட தமிழர் இளையராஜா, இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி, தமிழக அரசு சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அமைச்சர்களும், திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ”இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டும், புதிய, பழைய எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக இருந்து கொண்டும், ’வாங்க 2026இல் பார்க்கலாம்’ என தனக்கே உரிய புன்னகையோடு செயல்பட்டு வருகிறார் என் நண்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்றவர், தொடர்ந்து இளையராஜா பற்றிப் பேச ஆரம்பித்தார். “என் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா. நம் உலகம் வேறு, ராஜாவின் உலகம் வேறு. ராகங்களை அள்ளிக்கொடுப்பவர் ராஜா. உலகெங்கும் வாழும் தமிழர்களின் நாடி, ரத்தம், உயிர் என எல்லாவற்றிலும் ராஜா கலந்துள்ளார். 50 வருடங்களில் 1,600 படங்கள், 8,000 பாடல்கள் என்பது சாதாரண விஷயமல்ல. 70, 80, 90களில் இசையமைத்த பாடல்கள் தற்போது திரைக்கு வந்தால்கூட படம் ஹிட்டாகி விடும். ’கூலி’ படத்தில்கூட பழைய பாடல்களைப் பயன்படுத்தி இருப்போம். இளையராஜாவை மாமனிதராகப் பார்த்திருக்கிறேன். 50 ஆண்டுகளில் அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். முதன்முதலில் 74இல் ஜி.கே.வெங்கடேசனின் உதவியாளராக இருந்தபோது சின்ன பையனாக இருந்தார். ’புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் பார்த்தபோது ஓர் இளைஞராக.. கிளீன் சேவ் செய்து அவரைப் பார்த்தேன். பேன்ட் சர்ட் ஜிப்பாவுடன் இருந்த அவர், திடீரென ஒருநாள் மொட்டை அடித்து கழுத்தில் உத்திராட்ச கொட்டையுடன் பொட்டு வைத்து இருந்தார். அவரை பார்த்த உடன், ’என்ன சாமி இது’ என்று கேட்டபோது, ’இதுதான் சாமி ஒரிஜினல்’ என்றார்.
அப்போது முதல், அவரை ’சாமி’ என்றுதான் கூப்பிட்டு வருகிறேன். பஞ்சு அருணாசலத்துடன் ஒருமுறை கம்போசிங் சென்றிருந்தேன். ராகங்கள் அவரிடம் இருந்து அப்படிக் கொட்டுகிறது. ராகதேவி சரஸ்வதி, இந்த ராக தேவனுக்குப் பாடல்களை தள்ளிக் கொடுக்கின்றாள். இவர், அந்த ஹார்மோனியம் வழியாக அள்ளிக் கொடுக்கிறார். ராஜாவுடனான நட்பு எனக்கு பெரும் பாக்கியம். தமிழ் மக்களின் ரத்தத்தில் அவரது இசை ஊறிப்போய் உள்ளது. யாராக இருந்தாலும் இசையை அள்ளிக்கொடுப்பவர் இளையராஜா. ஆனால், கமலுக்கு மட்டும் சற்றுக் கூடுதலாக அள்ளிக் கொடுப்பார். அவர் பார்க்காத வெற்றிகள் இல்லை. ஆனால், ஒருவருக்குத் தொடர்ந்து வெற்றிகள் மட்டுமே கிடைக்கக் கூடாது. அவ்வபோது, தோல்விகளையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியின் அருமை தெரியும். அவர் கொடிகட்டி பறந்தபோது, இன்னொரு இசையமைப்பாளர் வந்தார்.
அவர் வந்தபின் மிகப்பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நான் உள்பட பலர் அந்தப் புதிய இசையமைப்பாளரிடம் சென்றோம். ஆனால், அவர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. என்ன நடந்தாலும் தி.நகரிலிருந்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு காலை 6 மணிக்கு இளையராஜாவின் கார் எப்போதும்போல் சென்றுகொண்டிருந்தது. பாஸ்கர் (இளையராஜாவின் சகோதரர்) மறைந்தார். ராஜாவின் மனைவி ஜீவா மறைந்தார்; உயிராக நினைத்த மகள் பவதாரணி மறைந்தார். ஒரே மகள் என்றால் அவ்வளவு அன்பு.. பிரியம்.. சும்மா உட்காந்திருப்பார். மகள் வந்தால் போன கரண்ட் வந்த மாதிரி. ஆனால் எந்தச் சலனமும் இல்லாமல் அவர் ஆர்மோனியம் வாசிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.
நமது உலகத்தில் அவர் இல்லை. இசை உலகத்தில் அவர் இருக்கிறார். பிரசாத் ஸ்டூடியோவில் அவருக்கு இடமில்லை என்ன சொன்னபோது, அதே ரோட்டில் ஒரு தியேட்டரை வாங்கி தனியாக ஒரு ஸ்டுடியோவை கட்டினார். திரையுலகில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், விவேக் ஆகிய இரண்டு பேரின் இடங்களை யாராலும் நிரப்ப முடியாது. கோவிட் காலத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்தபோது யாருக்கும் சிந்தாத அவரது கண்ணீர், நண்பன் எஸ்.பி.பாலசுப்ரமணிக்காகச் சிந்தியது. அதையடுத்து, ’மெட்டா... வரிகளா’ என்று வாக்குவாதம் வந்தது. அப்போது இளையராஜா, ’அது எல்லாம் எனக்கு தெரியாது. நான் சிம்பொனி எழுதி இருக்கிறேன். இந்த மாதிரி சிம்பொனி யாரும் இதுவரை எழுதியதில்லை’ என்றார்.
இந்த இளையராஜாவை எந்த அளவுகோலும் வைத்து அளக்க முடியாது. அதை மீறி நின்றவன் நான் என்று நின்றவர் இளையராஜா. அவரை, இன்கிரிடேபிள் இளையராஜா (incredible ilaiyaraaja) என்கிறோம். இளையராஜாவுக்கு இருக்கும் திமிரை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதற்கு மிகவும் தகுதியான ஆள் அவர்தான். நீதி, நியாயம், உண்மையுடன் கடினமாக உழைத்தால் எல்லாமே உன் பின்னால் வரும். அந்த இசைக்கு இருக்கும் பவரை நீங்கள் பார்த்தீர்கள். கமல்ஹாசன் நான்கு வரியில் பாடல் பாடினார். அந்தப் பாடலும் நான் இவ்வளவு நேரம் பேசியதும் ஒன்றுதான். அதுதான் அந்த இசையின் பவர். அதற்கு அரசன் இளையராஜாதான். அவர் என்றும் என்றும் நன்றாக இருக்க வேண்டும். இளையராஜா உங்களுடைய சுயசரிதை படத்தை சீக்கிரம் வெளியிடுங்கள். என்னைவிட்டால் நானே ஸ்கிரீன் ப்ளே எழுதிக் கொடுக்கிறேன்” என்றார்.