சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்திருக்கும் ’கூலி’ படம் இந்த வார இறுதியில், அதாவது சுதந்திர தினத்திற்கு ஒருநாள் முன்பாக ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம், ரஜினிகாந்தின் 171வது படமாகும். இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அமீர் கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதையொட்டி, கூலி படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முன்பதிவு விற்பனையில் இதுவரை ரூ.14.12 கோடியை வசூலித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இதுவரை மொத்தம் 6,82,046 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் பதிப்பிற்கு மட்டும் 6,69,050 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. தெலுங்கு பதிப்பு 3,474 டிக்கெட்டுகளையும், இந்தி பதிப்பு 9,040 டிக்கெட்டுகளையும் விற்பனை செய்துள்ளது. மிகக் குறைந்த விற்பனை கன்னட பதிப்பிற்கானது, 482 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய பிராந்தியங்கள் ரூ.10.7 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. கர்நாடகா முன்கூட்டியே டிக்கெட் விற்பனை மூலம் ரூ.3.89 கோடி வசூலித்துள்ளது.
கேரளா இதுவரை ரூ.4.57 கோடி வசூலித்துள்ளது. தெலங்கானாவின் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஆந்திரா ரூ.49.1 ஆயிரம் சம்பாதித்துள்ளது. இந்தி பெல்ட்டில், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி முறையே ரூ.45.63 லட்சத்தையும் ரூ.22.05 லட்சத்தையும் ஈட்டியுள்ளன. இருப்பினும், இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் 'பிளாக் இருக்கைகள்' மூலம், இந்த எண்ணிக்கை ரூ.20 கோடியை நெருங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளாக் இருக்கைகள் பொதுவாக கடைசி நிமிட முன்பதிவுகளுக்காக அல்லது சிறப்பு விளம்பரங்கள் மற்றும் ஸ்டுடியோ திட்டங்களின் ஒரு பகுதியாக தியேட்டர்களால் முன்பதிவு செய்யப்படுகின்றன.
மறுபுறம் இதே வார இறுதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’வார் 2’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது. ’வார் 2’ ஹிருத்திக் ரோஷனுக்கும் ஜூனியர் என்டிஆருக்கும் இடையிலான முதல் கூட்டணியைக் குறிக்கிறது. இந்த படத்தில் கியாரா அத்வானியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அயன் முகர்ஜி இயக்கிய ’வார் 2’, அதே பெயரில் 2019ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டரின் தொடர்ச்சியாகும். இந்த நிலையில், அந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் நேற்று தொடங்கியது. ஆயினும், ’வார் 2’ ரூ.2.08 கோடியை முன்கூட்டியே வசூலித்திருப்பதாக சாக்னில்க் தெரிவித்துள்ளது. இந்த படம், 6,731 காட்சிகளுக்கு கிட்டத்தட்ட 57,000 டிக்கெட்டுகளை விற்றுள்ளது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில். பிளாக் புக்கிங்குடன் இணைந்து, இந்தியாவில் வார் 2இன் தற்போதைய விற்பனை எண்ணிக்கை ரூ.5.72 கோடியாக உள்ளது.