இயக்குநர் மிஷ்கின், நடிகர் குரு சோமசுந்தரம் pt web
சினிமா

“மிஷ்கின் பேசியதில் தவறு இருக்கு; கெட்டவார்த்தைக்கு நான் சப்போர்ட் செய்யல.. ஆனா” - குரு சோமசுந்தரம்!

மிஷ்கின் பேசியதில் தவறு இருக்கிறது என பாட்டில் ராதா திரைப்பட நடிகர் குரு சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

அங்கேஷ்வர்

பாட்டில் ராதா திரைப்பட நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், நாகரீகமற்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். இசையமைப்பாளர் இளையராஜாவையும் ஒருமையில் பேசியிருந்தார். இதற்கு திரைத்துறையினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் லெனின் பாரதி இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டில் பெண்கள் பற்றி தட்டையான பொதுபுத்தியில் மிஷ்கின் பேசிய ஆபாச பேச்சை கண்டிக்காமல் சிரித்து கடந்து போன பா.ரஞ்சித், அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட மேடையிலிருந்த அத்தனை படைப்பாளர்களுக்கும் எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

பாடலாசிரியர் தாமரையும், “ஒரு பொதுமேடையில் இவ்வாறு இழிமொழியில் பேசும் அதிகாரத்தை இயக்குநர்களுக்கு யார் தந்தது? வெற்றிபெற்றவர்களென்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? அதை ரசித்துக் கைத்தட்டிச் சிரிக்கிற, மேடையிலுள்ள மற்றவர்களும் பார்வையாளர்களும் இதற்கு உடந்தைதான். இப்படிதான் சமூகச்சீரழிவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்கிறார்கள். இதுபோன்ற அநாகரிகங்களைப் பலத்தகுரலில் பொதுமக்கள் கண்டனம் செய்யவில்லையெனில், நம் அடுத்த தலைமுறையை ஒரு கேவலமான சமுதாயத்தில் விட்டுச்செல்கிறோம் என்று பொருள்” என தெரிவித்திருந்தார்.

2K love story திரைப்பட நிகழ்வில் பேசிய நடிகர் அருள்தாஸ், “சமீபத்தில் பாட்டில் ராதா நிகழ்வில் மிஷ்கின் பேசியது அநியாயமாகவும் அக்கிரமமாகவும் இருந்தது. அம்மாதிரியெல்லாம் பேசவேண்டும் என்று அவசியல் இல்லை. இயக்குநர் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது கிடையாதுதானே. பாலாவை அவன் தான் பாலா என்பது, இளையராஜாவை அவன்தான் இளையராஜா என்பது. யார்ரா நீ.. நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா தமிழ் சினிமாவில். போலி அறிவாளி என்றுதான் சொல்ல வேண்டும்” என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

நடிகர் குரு சோமசுந்தரம்

இந்நிலையில் குடும்பஸ்தன் திரைப்பட நிகழ்வின் செய்தியாளர் சந்திப்பு இன்று நிகழ்ந்தது. அதில் பேசிய நடிகர் குரு சோமசுந்தரம், “மிஷ்கின் பேசியதை இரு விதமாக பார்க்கிறேன். இதில் தவறும் இருக்கிறது. அடுத்தது, கடவுளைக்கூட நாம் அவன் இவன் என்றுதான் பேசுவோம். இளையராஜா என்பவர் ஜீனியஸ். அவர் எல்லாவற்றிற்கும் அப்பார்பட்டவர். எனவே, மிஷ்கின் அந்த அர்த்தத்தில் அதைச் சொல்லவில்லை. கெட்ட வார்த்தை பேசியதற்கு நான் சப்போர்ட் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.