தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை.. பறிமுதல் செய்யக்கோரி மனு!
செய்தியாளர் ராஜீவ்
அரசியல் கட்சிகளுக்கு தனி நம்பர் அல்லது நிறுவனங்கள் தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பவோர் பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பணத்தை செலுத்தி தேர்தல் நிதி பத்திரத்தை பெற்று, அதை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.
ஆனால், இத்திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாமல் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தேர்தல் நிதி பத்திர திட்டத்தை ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
மேலும், உச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தகவலின் படி 1,210 நன்கொடையாளர்கள் நாட்டின் 23 அரசியல் கட்சிகளுக்கு சுமார் 16,518 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது தெரிய வந்தது. இதனிடையே, கேம்.சிங் பாடி எனும் வழக்கறிஞர் தேர்தல் நிதி பத்திரம் மூலம் 16,518 கோடி ரூபாய் நிதியை பெற்ற அரசியல் கட்சிகளிடம் இருந்து நிதியை பறிமுதல் செய்ய உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ‘மறு ஆய்வு மனு’ தாக்கல் செய்த்துள்ளார். இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அறையில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.