உச்சத்தில் தங்கம் விலை.. வரியைக் குறைத்தால் விலை குறையுமா.. விலையைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
செய்தியாளர் கௌசல்யா
மஞ்சள் உலோகம் என்றாலே நம் மக்களுக்கு அலாதி பிரியம்தான்.. அணிந்து அழகை ரசித்துக்கொள்ளவும், அவசரத் தேவைக்கு அடகு வைக்கவும் உதவுவதுதான் காரணம். தங்கம் அணிவதை பாரம்பரியமாக கௌரவத்தின் அடையாளமாக நினைக்கும் நம் மக்கள், காரணங்களை தேடிப்பிடித்தாவது தங்கத்தை வாங்கிவிடுகின்றனர். இதனால்தான் தங்கம் விலை உச்சம் தொட்டாலும், நகைக்கடைகளில் கூட்டம் குறைந்தபாடில்லை.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அந்த ஆண்டுக்கான குறைந்த அளவாக தங்கம் ஒரு சவரன் 45 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் அக்டோபர் 31ஆம் தேதி அப்போதைய புதிய உச்சமாக ஒரு சவரன் 59 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டின் ஜனவரி 22ஆம் தேதி வரலாறு காணாத ஏற்றமாக ஒரு சவரன் 60 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அமெரிக்காவின் அரசியல், பொருளாதார சூழல்கள், சர்வதேச அளவில் நிலவும் பதற்றங்கள், உள்நாட்டில் தேவை போன்றவை தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
2023-24ஆம் நிதியாண்டில் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தது 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. சென்ற நிதியாண்டில் 4 ஆயிரத்து 800 கிலோ கடத்தல் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளாலும், ஆயிரத்து 400 கிலோ தங்கம் வருவாய் புலனாய்வு இயக்குநகரத்தாலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் கடத்தப்படுவதை தடுக்க சென்ற பட்ஜெட்டில் அதன் மீதான இறக்குமதி வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்தது. இந்நிலையில், விலையை கட்டுப்படுத்த நகைகளுக்கான ஜிஎஸ்டியை 3 சதவிகிதத்திலிருந்து ஒரு சதவிகிதமாக குறைக்க வேண்டும் என துறை சார்ந்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.
முதலீட்டு அடிப்படையில் பண்டக சந்தையில் தங்கம் வர்த்தகமாகி வரும் நிலையில், அதில் உள்ள ஏற்ற இறக்கங்கள் ஆபரணத் தங்கத்திலும் எதிரொலிக்கிறது. இதனால், தங்கம் மீதான வரியை குறைத்தாலும் நீண்ட கால அடிப்படையில் உயரத்தான் செய்யும் எனக் கூறும் நிபுணர்கள், அவசியத் தேவை இருந்தால் மட்டுமே ஆபரணம் வாங்கலாம் எனக் கூறுகின்றனர்.