ஆதவ் அர்ஜுனா - விஜய் web
சினிமா

இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம் | ‘உதயநிதி & எல்.முருகன் கூட்டு சதி’ - ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக்கானதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகனும், உதயநிதி ஸ்டாலினும் தான் காரணம் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Rishan Vengai

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ படம், சென்சார் சிக்கல் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தாமதமடைந்த நிலையில், ஓப்பனிங் மற்றும் பாடல் காட்சிகள் முதல் முழு படம் வரை இணையத்தில் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பாஜக-திமுக கூட்டு சதி என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி, உதயநிதி மற்றும் எல்.முருகன் மீது நேரடியாக குற்றம் சுமத்துகிறார்.

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. விஜயின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஜனநாயகன்

ஆனால் இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது CBFC தரப்பு. அதனை தொடர்ந்து பல கட்ட நடவடிக்கைகளுக்கு பின் இப்போது CBFC படத்தை பார்த்துவிட்டது. ஆனால் இன்னும் இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது தேர்தல் சமயம் என்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. விஜயும் அரசியல்வாதியாக களத்தில் இருக்கிறார். எனவே அவர் நடித்த படத்தை இப்போது வெளியிட மாட்டார்கள், தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தசூழலில் தான் இப்படத்தின் ஓப்பனிங் காட்சிகள், பாடல் காட்சிகள் என இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து தற்போது முழு திரைப்படமும் இணையத்தில் வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படம் இணையத்தில் பரவியதற்கு பாஜக, திமுக கட்சிகளின் கூட்டு சதி என்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘உதயநிதி & எல்.முருகன் கூட்டு சதி’ - ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

வெளியான ஜனநாயகன் படத்தின் காட்சிகளில் FOR EDIT எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், படக்குழுவுக்கு சம்பந்தப்பட்ட நபர் தான் வெளியிட்டிருக்க வேண்டும் என ஒரு தரப்பும், அரசியல் காரணங்கள் இருக்கலாம் என மறு தரப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தசூழலில் படத்தின் காட்சிகள் கசிந்தது குறித்து பேசியிருக்கும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “ஒரு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி சேட்லைட் கட்டுப்பாட்டில் இருக்கும், தற்போது சேட்லைட் பாஜக கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆனது விஜய்க்கான மிரட்டல். ஜனநாயகன் படத்தை முடக்கியது எல்.முருகனும், உதயநிதியும்தான், எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவுக்கு பராசக்தி படக்குழுவை அனுப்பிவைத்தது உதயநிதிதான். ஜனநாயகன் படத்தை நிறுத்த பாஜக எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தது என தெரியும், விஜய்க்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளனர். திமுகவினர் எம்ஜிஆருக்கும் இதேபோன்ற நெருக்கடிகளை கொடுத்தனர்” என குற்றஞ்சாட்டியுள்ளார்.