திஷா பதானி எக்ஸ் தளம்
சினிமா

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் என்கவுன்டர்.. நடந்தது என்ன?

நடிகை திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

Prakash J

நடிகை திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் திஷா பதானியும் ஒருவராக வலம் வருகிறார். இவர், தமிழில், சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் பரேலியில் உள்ள அவருடைய வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

disha patani

அதாவது, செப்டம்பர் 12 அன்று அதிகாலை 3.30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர்கள் 8 முதல் 10 முறை வீட்டை நோக்கிச் சுட்டதாகவும் திஷா பதானியின் தந்தை காவல் துறை புகாரில் தெரிவித்திருந்தார். இந்தச் செயலுக்கு வெளிநாட்டுத் தயாரிப்பு பிஸ்டல் பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டிற்குப் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

கோல்டி பிரார் கும்பல் பொறுப்பேற்பு.. மிரட்டல் பதிவு!

இதற்கிடையே, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கோல்டி பிரார் கும்பலைச் சேர்ந்தவர்கள் பொறுப்பேற்றனர். ஃபேஸ்புக்கில், அந்தக் கும்பலைச் சேர்ந்த வீரேந்திர சரண், மதத்திற்கு அவமரியாதை காட்டியதாகக் கூறினார். மேலும், “நாங்கள்தான் திஷா பதானியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினோம். அவர் நமது மரியாதைக்குரிய இந்து துறவிகளை (பிரேமானந்த் ஜி மகாராஜ் மற்றும் அனிருத்தாச்சார்யா ஜி மகராஜ்) அவமதித்துள்ளார். அவர் நமது சனாதன தர்மத்தை இழிவுபடுத்த முயன்றுள்ளார். நம் தெய்வங்களை இழிவுபடுத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. ’துப்பாக்கிச் சூடு வெறும் ட்ரெய்லர் மட்டும்தான்’ என எச்சரித்தார்.

disha patani

தவிர, “அடுத்த முறை, திஷாவோ அல்லது வேறு யாரேனும் எங்கள் மதத்திற்கு எதிராக அவமரியாதை செய்தால், அவர்களை வீட்டைவிட்டு உயிருடன் வெளியேற விடமாட்டோம். இந்தச் செய்தி திஷாவுக்கு மட்டுமல்ல, அனைத்துத் திரைப்படக் கலைஞர்களுக்கும், அவருடன் தொடர்புடைய மக்களுக்கும்தான். எதிர்காலத்தில் யாராவது எங்கள் மதத்தை அவமரியாதை செய்தால், அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எங்கள் மதத்தைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு, மதமும் முழு சமூகமும் எப்போதும் ஒன்றுதான், அவர்களைப் பாதுகாப்பது நமது முதல் கடமை" என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திசா பதானியின் வீட்டில் துப்பாக்கிச் சூடு ஏன்?

முன்னதாக, பிரபல இந்து மதச் சாமியார் கதா வச்சக் அனிருத் ஆச்சார்யா ஒரு இன்ஸ்டாகிராம் கதையில் பெண் வெறுப்பு கருத்தை வெளியிட்டதாக திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு குஷ்பு பதானி கருத்து தெரிவித்திருந்தார். ஜூலை மாத இறுதியில் இந்தச் சர்ச்சை வெடித்த நிலையில், குஷ்பு பதானியின் கருத்துகள் ஆன்மீகத் தலைவர் பிரேமானந்த் ஜி மகாராஜை விமர்சிப்பதாகக் கருதப்பட்டது, ஆனால் அவரது கருத்துகள் அனிருத் ஆச்சார்யாவுக்கு எதிராக மட்டுமே என்று அவர் தெளிவுபடுத்தியிருந்தார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து திஷா பதானியின் தந்தையும் ஓய்வுபெற்ற டிஎஸ்பியுமான ஜெகதீஷ் சிங் பதானி, "யாரும் எந்த அநாகரிகமான கருத்தையும் கூறியதாக நான் நினைக்கவில்லை. ஆச்சார்யா ஜி பெண்கள் குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தால், என் மகளும் அதைச் செய்தார். அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. ஆனால், அதைப் பற்றி யாரும் இவ்வளவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

disha patani

இந்த நிலையில், நடிகை திஷா பதானியின் பரேலி வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ரோஹ்தக்கைச் சேர்ந்த ரவீந்திரன் என்ற கல்லு மற்றும் சோனிபட்டைச் சேர்ந்த அருண் ஆகியோருக்கும் உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையினருக்கும் (STF) இடையேயான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. பின்னர், இந்த மோதலில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகக் காவல் துறை கூறியுள்ளது.