உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் டிஜே ஸ்பீக்கர் வாங்க தாய் பணம் தர மறுத்த நிலையில், மகனே தாயை செங்கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு மோகம், சூதாட்டத்தால் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொள்வது, ஆடம்பர வாழ்க்கை வாழ தவறான வழியில் பணம் சேர்க்க நினைப்பது என தினந்தோறும் பல அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அரங்கேறி அச்சத்தை ஏற்படுத்துவது தொடர்கதை ஆகிவருகிறது.
குறிப்பாக பணத்தின் மீது கொண்ட நாட்டம், மனிதர்களை மனிதத்தன்மையையே இல்லாத மிருகமாக மாற்றும் அளவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்தேறியிருக்கும் சம்பவம் ஒன்று, குழந்தைகளின் உளவியல் குறித்தான பெரும் கவலையை உண்டாக்கும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில், ட்ரோனிகா சிட்டியில் அக்டோபர் 4, 2024 அன்று, சுனில் குமார் என்ற நபர் தனது மனைவி சங்கீதா அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது திடுக்கிடும் காட்சிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி சங்கீதாவை கொலை செய்தது வேறு யாரும் இல்லை, அவரது சொந்த மகனான சுதிர்தான். சுதிர் அவரது நண்பர்களுடன் இணைந்து இந்த கொலையை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மகன் சுதிரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், கொலைக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
அதன்படி, புதிய டிகே ஸ்பீக்கர் வாங்கவும், செலவிற்காகவும் ரூ, 20,000-த்தை தனது தாய் சங்கீதாவிடம் சுதிர் கேட்டுள்ளார். ஆனால், பணம் தர மறுத்த சங்கீதா, குடும்ப சொத்துக்களை சுதிரின் மூத்த சகோதரியின் பெயரில் மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூற, விரக்தி அடைந்துள்ளார் சுதிர். இதை அவமானமாக நினைத்த சுதிர் இது குறித்து தனது நண்பர்களுடன் தெரிவிக்கவே, அனைவரும் இணைந்து தாய் சங்கீதாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, அக்டோபர் 3 ஆம் தேதி அன்று, சுதிர் தனது தாயை அவரது பணியிடத்திலிருந்து அழைத்துக்கொண்டு தனிமையான இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது இரண்டு நண்பர்களையும் வரவழைத்துள்ளார். இதனையடுத்து, செங்கற்களை கொண்டு சங்கீதாவை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
இந்த வாக்குமூலத்தின் அடிபப்டையில், அக்டோபர் 23 ஆம் தேதி சுதிரையும், அவரது நண்பர்கள் சச்சின் தியாகி மற்றும் குர்தா என்ற அங்கித் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்த நிலையில், சம்பந்தப்பட்ட மோட்டர் சைக்கிளையும் கண்டெடுத்துள்ளனர்.
பணத்திற்காக பெற்ற தாயையே மகன் கொலை செய்துள்ள இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.