செய்தியாளர் சேஷகிரி
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா எதிர்பார்ப்பது என்ன... அமெரிக்காவிடம் இந்தியா கேட்பது என்ன...
அமெரிக்கா மரபணு மாற்ற தொழில்நுட்பம் மூலம் விளைவிக்கப்பட்ட விளைபொருட்களை இந்திய சந்தைகளில் விற்க அனுமதிப்பதுடன் குறைவான வரி விதிக்கவேண்டும் என ட்ரம்ப் அரசு நிர்பந்தித்து வருகிறது. இதே போல பால் பொருட்களுக்கும் இந்திய சந்தைகள் திறக்கப்படவேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்க கார்கள், இரு சக்கர வாகனங்களுக்கும் இந்தியா பச்சைக்கொடி காட்ட வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். அதிஉயர் தொழில்நுட்ப சாதனங்களுக்கும் இந்தியா தன் கதவுகளை திறக்கவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இது தவிர கச்சா எண்ணெய், விமானங்கள், போர் தளவாடங்கள் போன்றவற்றை இந்தியா அதிகளவில் வாங்கவேண்டும் என்றும் அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இதில் வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்கள் போன்றவற்றை அனுமதிக்கும் கோரிக்கைகளை ஏற்றால் உள்நாட்டில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் எனக்கூறி இந்தியா மறுத்து வருகிறது. அதே நேரம் மரபணு மாற்ற விளைபொருட்களை அனுமதிப்பது வேறு பல சிக்கல்களையும் ஏற்படுத்தும் என்றும் இந்தியா கவலைப்படுகிறது.
இன்னொருபுறம் ஆடைகள், ஆபரணங்கள், தோல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனங்கள், கடல் உணவுப் பொருட்கள், பழங்கள் போன்றவற்றை எளிதில் விற்பதற்கான வசதிகளை செய்து தர வேண்டும் என இந்தியா அமெரிக்காவிடம் கோரியுள்ளது. பல்வேறு துறைகளில் அவுட்சோர்சிங் சேவை செய்து தருவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்காக வர்த்தகத்துறை சிறப்புச்செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு முழுமூச்சுடன் முட்டிமோதிக்கொண்டுள்ளது. இந்த வர்த்தக யுத்தத்தில் யாருடைய விருப்பங்கள் நிறைவேறும்...யார் விட்டுத்தரப்போகிறார்கள்...எந்தளவுக்கு விட்டுத்தரப்போகிறார்கள் என்பது பில்லியன் டாலர் கேள்வி...