தொடரும் போர் | கைதிகளைப் பரிமாறிக் கொண்ட ரஷ்யா - உக்ரைன்!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கியுள்ளது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், போரின்போது சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் சுமுக முடிவின்படி பரிமாறிக் கொண்டது. இரண்டு ஆண்டுகளைத் தாண்டி நடக்கும் ரஷ்யா-உக்ரைன் போரின்போது இருநாடுகளும் ஏராளமான ராணுவ வீரர்களை கைது செய்தது. சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை நல்லிணக்க அடிப்படையில் சொந்த நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை விடுத்ததன் பேரில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இதனைத் தொடர்ந்து தலா 150 கைதிகளை ரஷ்யாவும், உக்ரைனும் பரிமாறிக் கொண்டன. விடுவிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் வீடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படுமென ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.