மீண்டும் பரவும் கொரோனா... உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?
இந்தியா, சீனா, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மே மாத தொடக்கத்தில் சிங்கப்பூரில் 14 ஆயிரத்து 200 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல, சீனா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போது பரவி வரும் இந்த கொரோனா வைரஸ், 2023 டிசம்பரில் தோன்றிய ஜேஎன் 1 (JN.1) என்ற வகையிலிருந்து உருமாறிய எல்எஃப் 7 (LF.7)மற்றும் என்பி 1.8 (NB.1.8) ஆகிய வைரஸ்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன.
இந்த ஜேஎன் 1 வகை வைரஸ் உருமாற்றம் கவனிக்க வேண்டிய மாறுபாடுதான் என்றாலும், அது கவலையளிக்க கூடிய மாறுபாடாக இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது, லேசான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் அச்சப்பட வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், 2021 கொரோனா இரண்டாவது அலையின்போது இந்தியாவில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது வெறும் 257 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும குறிப்பிட்டுள்ளது. அதேபோல, இந்த கொரோனா பரவல் முன்பை போல ஒரு பருவகாலமாக இல்லாமல், ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட சில இடங்களில் உள்ளூர் பரவலை மட்டுமே ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்வதைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கோள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.