“இங்கேயே சமாதி ஆகிவிடுவேன் போல” ஓமனில் வேலைக்காகச் சென்றபெண் கண்ணீருடன் ஆடியோ
திருச்சி மாவட்டம், தென்னூர் பகுதியை சார்ந்தவர் ஆரிப். இவருக்கு சபுரா என்ற மனைவியும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்நிலையில் தனது வாழ்வாதாரத்திற்காக சபுரா வீட்டு வேலைக்காக ஓமன் நாட்டிற்கு ஏஜென்சி மூலம் கடந்த ஜூன் மாதம் சென்றுள்ளார். ஆறு மாதமாக சம்பளம் அனுப்பி வந்த நிலையில், வேலைப்பளு அதிகம் இருந்ததன் காரணமாக தன் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புவதாக வேலை செய்த இடத்தில் தெரிவிக்க, அவர் ஓமனில் உள்ள லேபர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்.
லேபர் அலுவலகத்தில் உள்ளவர்கள் 3.50லட்சம் கொடுத்தால் சபுராவை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வேலைக்கு அனுப்பி வைத்த ஓமன் ஏஜென்ட்டிடம் கேட்டதற்கு 20 நாட்களில் அவர் இந்தியா திரும்புவார் என உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் ஆரிபை தொடர்பு கொண்ட சபுரா, இங்கு தன்னை சித்திரவதை செய்வதாகவும், பணம் தரவில்லை என்றால் போலீஸிடம் ஒப்படைத்து விடுவோம் என மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை அனுப்பி வைத்த ஏஜென்ட் வீட்டிற்கு சென்று பொறுமையாக பேசுமாறு தெரிவித்த சபுரா, இல்லையென்றால் ‘இங்கேயே சமாதியாகி விடுவேன் போல இருக்கிறது’ என பயந்தபடி கண்ணீருடன் ஆடியோவை அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் சபுராவின் கணவர் ஆரிப், ஓமனில் சிக்கியுள்ள தனது மனைவியை இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும், தனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.