அமெரிக்கா | லாஸ் ஏஞ்சல்ஸில் பரவிய காட்டுத் தீ.. 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்!
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில், அதை அணைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை பற்றிய தீ, வனப்பகுதிகளில் ஏராளமான மரங்களையும் புல்வெளிகளையும் கருகச்செய்துள்ளது. மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் தீ பரவியதால் ஏராளமான வீடுகள் பற்றி எரிகின்றன. இதுவரை 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான வனப்பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளை காட்டு தீ அழித்து விட்டதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனத்தை ஒட்டிய லாஸ் ஏஞ்சல்ஸ் நகரப் பகுதியில் உள்ள 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதால் தீயினை கட்டுப்படுத்தும் பணியில் கலிஃபோர்னியா தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயால் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் பலர் அவசரஅவசரமாக வீட்டைவீட்டு வெளியேறினர். இதுவரை, 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காட்டுத் தீயால் ஒரேநேரத்தில் வாகனங்கள் குவிந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனம் கிடைக்காத பலர் உடைமைகளை எடுத்துக்கொண்டு நடந்தே வெளியேறி வருகின்றனர். தீ ஏற்பட்ட பகுதிகளில் காற்று பலமாக வீசுவதால் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். பலத்த காற்று காரணமாக சுமார் ஒன்றரை லட்சம் வீடுகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமல்லாது கலிஃபோர்னியாவிலும் தீ வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும், வேகமான காற்றால்தான் தீ பரவி வருகிறது என்றும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.