பிரான்சில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்.. தற்காலிகமாக மூடப்பட்ட 400 பள்ளிகள்.. காரணம் என்ன?
பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாதது, அதிக மாணவர்கள் கொண்ட வகுப்பறைகள், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் நீண்ட நேர வகுப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, பாரிஸ் நகரப் பகுதியில் கடந்த வாரம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். தற்போது இந்தப் போராட்டம் நாடு முழுவதும் வேகமாக பரவியுள்ளது. அக்டோபர் 2-ம் தேதியான நேற்று பிரான்ஸில் 560 பள்ளிகளில் போராட்டம் ஏற்பட்டதாக அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 400 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பல இடங்களில் மாணவர்கள், பள்ளிகளின் நுழைவாயில்களை முற்றுகையிட்டதுடன், குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைத்தும், காவல்துறையினரை நோக்கி கற்கள் மற்றும் பாட்டில்களை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்து வருகின்றனர்.
இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் (Gérald Darmanin) தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 170 மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கல்வித்துறை அமைச்சர் எட்வர்ட் ஜெஃப்ரே (Édouard Geffray) தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, கல்வித்துறையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்வது. சில பள்ளிகளில் ஒரு வகுப்பில் 30 முதல் 40 மாணவர்கள் வரை இருப்பதாகவும், ஆசிரியர்கள் இல்லாததால் வகுப்புகள் பாதிக்கப்படுவதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத பள்ளிக் கட்டடங்கள், அதிக நேரம் நீடிக்கும் வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழக சேர்க்கைக்கான சிக்கலான நடைமுறைகள் குறித்தும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறி வருவதாக பிரான்ஸ் அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதேநேரத்தில், காவல்துறையினரின் நடவடிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பதாக மாணவர் அமைப்புகள் விமர்சித்து வருகிறது.
பிரான்ஸில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாணவர் போராட்டம் அந்நாட்டின் அரசியலிலும் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

