ஏனைய இந்திய நகரங்களைக் காட்டிலும், பெரும்பாலான தமிழர்களை கொல்கத்தா வெகுவாக ஈர்ப்பதைப் பார்க்க முடியும். சிறு கப்பல்களைப் போன்ற பெரும் படகுகள் பயணிக்கும் ஹூக்ளி ஆற்றங்கரையிலிருந்து விரியும் நகரின் அழகு; புராதனமும் நவீனமும் கலந்த பண்பாட்டு காற்று; இவற்றையெல்லாம்விட தமிழர்களிடத்தில் வங்காளிகள் காட்டும் ஆர்வமும் பிரியமும் அதற்கு முக்கியமான காரணங்களாக இருக்கலாம் என்று தோன்றும்.
இரு சமூகங்களுக்கும் இடையே ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. முக்கியமாக
தமிழ்ச் சமூகம் போன்று ஆழமான பண்பாட்டு வேர்களைக் கொண்டதான வங்கத்துச் சமூகம் கிழக்கு, மேற்கு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு நூற்றாண்டு ஆகிறது. பிரிட்டிஷார் 1905இல் வங்கத்தைப் பிரித்தார்கள். பிரிவினைக்கு எதிராகப் பெரும் போராட்டங்கள் வங்காளிகள் இடையே வெடித்தன. கலவரம் மூண்டது. ஆயினும் இணைய முடியவில்லை.
வங்காளிகளை அவர்களுடைய மொழியுணர்வு இணைத்தது; சமூகத்தில் ஆழமாகப் புரையோடியிருக்கும் மதவுணர்வு பிளந்தது.
1947 பிரிவினையின்போது, மதவுணர்வு உச்சத்தில் இருந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்த கிழக்கு வங்கம் பாகிஸ்தானின் ஒரு பகுதி ஆனது. இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த மேற்கு வங்கம் இந்தியாவின் ஒரு பகுதி ஆனது. இரண்டு பகுதிகளிலுமே மதக் கலவரங்களில் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுடைய சுதந்திரத்தைப் பிரகடனம் செய்த நாட்களில், காந்தி டெல்லியில் இல்லை; வங்காளிகளின் மத்தியில், கலவரங்களைத் தணிக்கும் பணியில் இருந்தார்.
தமிழகத்தைப் போன்றே கூட்டாட்சிக்கான வலுவான குரல்களைக் கொண்ட சமூகம் வங்கம். பிளவுபடாத பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரங்களை இந்தியர்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலமாக, இந்திய விடுதலையைத் தள்ளிப்போடும் முயற்சியில் பிரிட்டிஷார் இறங்கினார்கள். இதற்கான ஏற்பாடாக ஓர் அரசமைப்புச் சட்டத்தை 1935இல் அவர்கள் கொண்டுவந்தனர்.
“பிராந்தியங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தரும் கூட்டாட்சியாகவே நாட்டின் அரசமைப்பு அமைய வேண்டும்”
என்று வங்காளிகள் மத்தியில் அப்போது எழுந்த குரல், நாடு பிளவுபட்ட பிறகும் இரு பிராந்தியங்களிலும் தொடர்ந்தது.
1947இல் மதத்தின் பெயரால் பாகிஸ்தானின் ஒரு பகுதியான கிழக்கு வங்கம் அடுத்த ஓராண்டிலேயே இஸ்லாமாபாத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழ அதன் முதல் ஆட்சியாளர் ஜின்னா தேர்ந்தெடுத்த ஒற்றையாட்சித்தன்மையே காரணமாக அமைந்தது. 1948இல், ‘உருது மட்டுமே பாகிஸ்தானின் ஆட்சிமொழி’ என்று அவர் அறிவித்தார். “உருது, வங்கம் மற்றும் ஆங்கிலம்” எனும் ஏற்பாட்டை முன்மொழிந்த வங்காளிகள் மொழிப் போராட்ட இயக்கத்தை ஆரம்பித்தனர். மாணவர்கள் இதன் முன்வரிசையில் நின்றனர்.
1952, பிப்ரவரி 21 அன்று டாக்காவில் நடந்த போராட்டத்தில், டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறை துப்பாக்கிச்சூட்டை நடத்தியபோது, ஆழமான வெறுப்பை அரசு உருவாக்கிக்கொண்டது. தொடர் கொந்தளிப்பை எதிர்கொள்ளும் விதமாக 1954இல், வங்க மொழியையும் ஆட்சிமொழிப் பட்டியலில் இணைத்து அரசமைப்பில் மாற்றத்தை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கொண்டுவந்தாலும், நிதிப் பங்கீடு உள்ளிட்ட அதிகாரப் பகிர்வில் தொடர் பாரபட்சத்தை எதிர்கொண்டனர் வங்காளிகள்.
பாகிஸ்தானின் அங்கமாக இருந்த கால் நூற்றாண்டு காலகட்டத்தில், 1950-1970 இருபதாண்டுகளில், மேற்குக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 40.5% அளவுக்கே கிழக்குக்கு ஒதுக்கப்பட்டதான புலம்பலும், ஆட்சியதிகாரத்தில் கிழக்கு பிராந்தியத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லாததான குமுறலும், “கிழக்கு தேய்கிறது, மேற்கு செழிக்கிறது” எனும் குரலுக்கு வழிவகுத்தது.
வங்காளிகள் இந்தப் பாரபட்சத்தை முடிவுக்குக் கொண்டுவர 1966இல் ‘ஆறு அம்ச இயக்கம்’ நடத்தினர். பாகிஸ்தான் அரசிடம் அவர்கள் முன்மொழிந்த ஆறு விஷயங்களின் சுருக்கம் இதுதான்:
நாடு ஜனநாயகபூர்வமான கூட்டாட்சியாகச் செயல்பட வேண்டும்; ராணுவம், வெளியுறவு ஒன்றிய அரசிடமும், ஏனைய துறைகள் அனைத்தும் மாநில அரசுகளிடமும் இருக்க வேண்டும்.
ராணுவமயமும் இஸ்லாமியமயமும் மிகுந்த அரசாட்சியாக பாகிஸ்தான் தன்னுடைய முதல் கால் நூற்றாண்டில் உருவெடுத்திருந்ததோடு, அதன் ஆட்சியாளர்கள் உருதுவைத் திணிக்கும் முயற்சியை எப்போதும் மனதில் கொண்டிருந்தது, வங்காளிகளை அந்நியப்படுத்திக்கொண்டே இருந்தது.
பாகிஸ்தானின் பண்பாட்டுக்கு மாற்றுப் பண்பாட்டைப் பேசும் இயக்கமாக வங்கதேச விடுதலை இயக்கம் இப்படித்தான் உருவெடுத்தது. பாகிஸ்தானுடைய பிரதான கட்சியான ‘முஸ்லிம் லீக்’ மதத்தை முதன்மைப்படுத்தியது என்றால், வங்கதேசத்தின் பிரதான கட்சியாகப் பிறந்த ‘அவாமி லீக்’ மக்களை முதன்மைப்படுத்தியது (வங்கத்தில் அவாமி என்ற சொல்லுக்கு சாமானிய மக்கள் என்று அர்த்தம்). அமெரிக்காவின் முதலாளித்துவத்தோடு பாகிஸ்தான் தேசியவாதம் கனவுறவைக் கொண்டிருந்தால், ரஷ்யா - சீனாவின் சோஷலிஸத்தோடு வங்கதேச தேசியவாதம் கனவுறவைக் கொண்டிருந்தது.
ராணுவ ஆட்சியாளர்கள் ஆதிக்கத்திலேயே இருந்த பாகிஸ்தான் தன்னுடைய முதல் பொதுத் தேர்தலை 1970இல்தான் நடத்தியது. மேற்கு பிராந்தியம் ஜனநாயகத்துக்கான பரீட்சையாக இதை அணுக, கிழக்கு பிராந்தியம் சுயாட்சிக்கான பரீட்சையாக இதை அணுகியது. அன்றைய பாகிஸ்தானின் மக்கள்தொகையில் வங்காளிகள் 54% என்பதால், நாடாளுமன்றத்தின் 313 இடங்களில், 169 இடங்கள் கிழக்கு பிராந்தியத்தில் இருந்தன; வங்கதேச தேசியவாதத்தின் முகமாகத் திகழ்ந்த முஜிபுர் ரஹ்மானுடைய அவாமி லீக் 167 இடங்களை அங்கே வென்றிருந்தது.
ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு இந்த எண்ணிக்கை தாராளமாக இருந்த சூழலில், பாகிஸ்தானின் ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமராக முஜிபுர் பதவியேற்றிருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்துக்கு விருப்பம் இல்லை. மேற்கு பிராந்தியத்தில் வென்றிருந்த ஜுல்பிகர் அலி புட்டோ இரண்டு பிரதமர்கள் எனும் மாற்றுத் திட்டத்தோடு முஜிபுருடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். முஜிபுர் ஆறு அம்சங்களை முன்வைத்துப் பேசலானார். புட்டோ நிராகரித்தார். தேசத்தின் பிளவுக்கு இது வழிவகுத்தது. அந்த ஆண்டின் இறுதியில் வந்த ‘போலா புயல்’ மூன்று லட்சம் வங்காளிகளின் உயிரைப் பறித்தது. கிழக்கு பிராந்தியம் மீதான அரசின் அலட்சியமே இவ்வளவு பாதிப்புக்குக் காரணம் என்று வெகுண்டெழுந்த வங்காளிகளைப் போர் இழுத்தது.
போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய மூர்க்கமான தாக்குதலும், பதிலுக்கு வங்காளிகள் மத்தியில் உருவெடுத்த ஆயுதக் குழுக்களும், போரின் உச்சத்தில் இந்தியப் படைகள் உள்ளே நுழைந்ததும், பாகிஸ்தான் ராணுவம் 90,000 வீரர்களுடன் சரண் அடைந்ததும், 1972இல் ‘வங்கதேசம்’ எனும் சுதந்திர நாடு உருவானதும், மக்களுடைய வானளாவிய ஆதரவுடன் அதன் முதல் ஆட்சியாளராக முஜிபுர் பதவியேற்றதும், உலகளாவிய மொழிப் போர் இயக்கங்களில் வங்க மொழி இயக்கம் முதன்மை பெற்றதும் அதிகம் பேசப்பட்ட வரலாறு.
வங்க மொழிப் போராளிகள் 1954இல் டாக்காவில் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்ட பிப்ரவரி 21 நாளையே உலகம் இன்று சர்வதேச தாய்மொழி நாளாக அனுசரிக்கிறது.
வங்கத்தின் பல கதைகளையும் வாசிக்கும்போது, தவிர்க்கவே முடியாமல் தமிழகத்தின் பல கதைகள் நம் நினைவின் பரப்புக்கு வந்து செல்வதை உணர முடியும்.
தமிழர்கள் மொழிப் போராட்டத்தை நினைவுகூர்கையில் எப்படி பெரியாரும் அண்ணாவும் வந்து செல்வார்களோ, அப்படி வங்காளிகளுக்கு முஜிபுர் இருந்தார். கூடவே ஒரு தேசமாகவும் வங்கதேசம் உருவெடுத்ததால், இந்தியாவுக்கு காந்தி, நேரு போன்று வங்கதேசத்துக்கு இரண்டுமாக முஜிபுர் அமைந்தார். அப்படிப்பட்ட முஜிபுரின் சிலைகளைத்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், சமீபத்திய கிளர்ச்சியின்போது சில்லுசில்லாக உடைத்தெறிந்தனர் வங்கத்து மாணவர்கள்.
முஜிபுருக்கு இரண்டு முகங்கள் இருந்தன. முதலாவது, வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்த சுயமரியாதைக்காரரின் முகம். இரண்டாவது, ஆட்சிக்கு வந்த வேகத்தில் சர்வ அதிகாரங்களையும் வளைத்துக்கொள்ள முற்பட்ட யதேசத்திகாரியின் முகம்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை வங்கதேசத்தின் அரசமைப்புச் சட்டம் வரித்துக்கொண்டாலும், பிரதமராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அதிபர் பாணியில் செயல்பட்டார் முஜிபுர். எதிர்க்கட்சிகளை அழித்தொழித்தார். ஊடகங்களை ஒடுக்கினார். ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில், 1975இல் மனைவி - குழந்தைகளோடு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார் முஜிபுர். வங்கதேசத்தின் முதல் கால் நூற்றாண்டு காலம் ராணுவ ஆதிக்கத்திலேயே கழிந்தது.
ஜெர்மனியில் அப்போது இருந்த முஜிபுரின் இரு புதல்விகள் மட்டும் இந்தப் படுகொலையில் தப்பினர். அவர்களில் ஒருவரான ஷேக் ஹசினா பின்னாளில், முஜிபுரின் அரசியல் வாரிசாக உருவெடுத்தார். 1995இல் பிரதமரானபோது, ஒப்பீட்டளவில் நல்லாட்சியைக் கொடுத்த ஹசீனா, 2009இல் மீண்டும் பிரதமரான பிறகு, யதேச்சதிகாரியாக உருவெடுத்தார். வங்கதேசத்தின் வறுமை முகத்தை மாற்றியவராக இருந்தாலும், வங்கதேசத்தில் வளரவிருந்த ஜனநாயகத்தை நொறுக்கியவராகவும் இருந்தார் ஹசீனா.
நாட்டின் பொருளாதாரம் கீழே சென்றுகொண்டிருந்ததும், மக்கள் இடையே அதிருப்தி வளர்ந்துகொண்டிருந்ததும் போராட்டங்கள் வெடிக்க காரணமாக இருந்தன. ‘அவாமி லீக்’ பெரும் கட்சியாக உருவெடுக்க எப்படி 1954இல் டாக்கா மாணவர்கள் நடத்திய போராட்டமும், அரசு நடத்திய துப்பாக்கிச் சூடும் காரணமாக இருந்தனவோ அப்படியே ‘அவாமி லீக்’ வீழ்ச்சிக்கு, 2024இல் டாக்கா மாணவர்கள் நடத்திய போராட்டமும், அரசப் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூடும் காரணமாக அமைந்தன.
முஜிபுரிடமிருந்துதான் ஹசீனா தனக்கான அரசியலதிகாரத்தைப் பெற்றார். போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மரணத்துக்குப் பின் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற ஹசீனாவைத் தண்டிக்க முடியாத கோபத்தை முஜிபுர் சிலைகள் மீது காட்டுகின்றனர் மாணவர்கள். ஹசினாவின் வீழ்ச்சிக்குப் பின் பொறுப்பேற்றிருக்கும் இடைக்கால அரசில் பங்கேற்றிருக்கும் மாணவர் தலைவர் நஹீத் இஸ்லாம், “முஜிபுரின் சிலைகள் பாசிஸத்தின் குறியீடுகள்” என்று சொல்லியிருப்பது, காலத்தின் குழிகளிலிருந்து தோண்டி எடுத்தும்கூட வரலாறு சிலரைத் தண்டிக்கும் என்பதையே சுட்டுகிறது.
வங்கதேசத்தை மதச்சார்பற்ற குடியரசாகப் பார்க்கும் கனவு வங்கச் சமூகத்துக்கு முஜிபுர் காலத்திலிருந்தே உண்டு. சங்கடமான விஷயம் என்னவென்றால், ஜனநாயகம் மேலெழும் இந்தத் தருணத்திலும்கூட அதற்கான அறிகுறிகள் தொலைதூரம் வரை தென்படவே இல்லை. ஹசீனா வீழ்ச்சியோடு, ‘ஜமாத் இ இஸ்லாமி பங்களாதேஷ்’ போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளும், ஆயுததாரிகளும் மேலெழுந்திருப்பதும், சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்திருப்பதும் வங்கதேச அரசியலில் மதத்தின் கரங்களுடைய இறுக்கம் வலுப்படுவதையே வெளிப்படுத்துகின்றன.
வங்காளிகளுக்கு முன்பே 1937-ல் மொழிப் போராட்டத்தை முன்னெடுத்த வரலாற்றைக் கொண்ட தமிழர்கள் இங்கே கவனிக்க வேண்டியதும், பெருமை கொள்ளக்கூடியதுமான அம்சம் என்ன?
தமிழ்நாட்டின் தலைவர்கள் ஜனநாயகத்தைக் கற்பித்ததோடு, அதில் அவர்களும் உறுதியாக நின்றனர். ஆயுதம் தாங்கிய வழிமுறைகளை அவர்கள் முற்றிலுமாக நிராகரித்தார்கள்; தொடர் உரையாடல்கள், நெகிழ்வான பேச்சுவார்த்தைகளைக் கூட்டாட்சி வழிமுறையின் அம்சமாக மாற்றினார்கள். முக்கியமாக, ஜனநாயகத்துக்கான அறைகூவலாக அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் மதத்தை அவர்கள் கலக்கவில்லை; சொல்லப்போனால் மொழியை மதத்துக்கு எதிராக நிறுத்தினார்கள். அதன் வழியாகவே மதச்சார்பின்மையையும் நீடித்த நல்லிணக்கத்தையும் சாதித்தார்கள்!
கட்டுரையானது, கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளைப் பிரதிபலிக்கிறது. கட்டுரையாளர் பணியாற்றும் நிறுவனம், இதை வெளியிடும் நிறுவனங்களின் கருத்துகளைக் கட்டுரை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை.