மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், நான்கு வயதுடைய இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். அக்குழந்தைகளுக்கு நீதி கேட்டும், இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று பத்லாபூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் வன்முறைக் களமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயேகம் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் அதன் முதல்வர் மற்றும் இரண்டு ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “பத்லாபூரில் நடைபெறும் சம்பவத்தை தீவிரமாக கவனித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த வழக்கை விரைவுபடுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாரையும் விட்டுவைக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, "பள்ளி வளாகத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்; ஒட்டுமொத்த மாநிலமும் கொதித்துப் போய் நீதி கேட்டு போராடுகிறது. பெண்களின் பாதுகாப்பை மாநில அரசு தொடர்ந்து புறக்கணிப்பது வெட்கக்கேடானது” எனத் தெரிவித்துள்ளார்.