பாகிஸ்தானில் புதிய அரசியல் புயல்.. தீவிரமாக விவாதிக்கப்படும் 1971 பிரிவினை - என்ன நடக்கிறது?
நிர்வாகம் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில், பல தசாப்தங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் சில மாகாணங்கள் பிரிக்கப்பட இருக்கின்றன. அவை, நிச்சயமாக உருவாக்கப்படும் எனவும் அந்நாட்டு மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அப்துல் அலீம் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிரிக்கப்படும் மாகாணங்கள்
அண்டை நாடான பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி செயல்பட்டு வருகிறது. பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். அதேநேரத்தில் திருத்தப்பட்ட விதிகளின்படி, நாட்டின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைவராக (CDF) ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சக்திவாய்ந்த பொறுப்பு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது. இந்தச் சூழலில், பாகிஸ்தானில் சிறிய மாகாணங்கள் நிச்சயமாக உருவாக்கப்படும் என மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பேசுபொருளாகி உள்ளது. பல ஆண்டுகளாக, பாகிஸ்தான் கூட்டமைப்பில் கூடுதல் மாகாணங்களைச் சேர்க்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதன் விமர்சனங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், மத்திய அமைச்சர் அப்துல் அலீம் கான் தெரிவித்திருப்பது உறுதியாகி உள்ளது. மாநாடு ஒன்றில் உரையாற்றிய அப்துல் அலீம் கான், “சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா (கேபி) ஆகியவற்றிலிருந்து தலா மூன்று மாகாணங்கள் உருவாக்கப்படும். இந்த நடவடிக்கை நிர்வாகக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும் குடிமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும் உதவும். நம்மைச் சுற்றியுள்ள அனைத்து அண்டை நாடுகளிலும் பல சிறிய மாகாணங்கள் உள்ளன” எனவும் அவர் பேசியதாக ஜியோ டிவி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் அதிக மாகாணங்களை பிரிப்பதற்கான திட்டம் முன்வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. தொடர்ந்து இதுதொடர்பாக விவாதங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 28வது திருத்தத்தின் மூலம் புதிய மாகாணங்களை உருவாக்குவதற்கு அனைத்து சட்ட மற்றும் ஜனநாயக வழிகளையும் பயன்படுத்தப்போவதாக MQM-P தெரிவித்துள்ளது. இது எந்தளவுக்கு சாத்தியமாகும் எனத் தெரியவில்லை.
”பிரித்தால் ஆபத்து” - எச்சரிக்கும் நிபுணர்கள்
அதேநேரத்தில், பாகிஸ்தானில் மாகாணங்களை மேலும் பிரிப்பது நன்மையைவிட அதிக தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மூத்த பாகிஸ்தான் அதிகாரியும் உயர் போலீஸ் அதிகாரியுமான சையத் அக்தர் அலி ஷா, ”பாகிஸ்தான் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை மாகாணங்களின் எண்ணிக்கை அல்ல, மாறாக நிர்வாகத்தில் உள்ள இடைவெளிகள், அவை சட்டத்தின் ஆட்சியுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. ஆகையால், மாகாணங்களைப் பெருக்குவது மட்டுமே இந்த அடிப்படை கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்க்காது. உண்மையில், அது அவற்றை அதிகரிக்கக்கூடும்” என அவர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு புறம், இத்தகைய விவாதமானது, அசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கலப்பின ஆட்சியில் பிளவுபடுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வலுவான சுதந்திர உணர்வுகளைக் கொண்டு போராடி வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது. மேலும், அப்துல் அலீம் கான் தலைவராக உள்ள கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான கட்சியும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கின்றன. இதில் அப்துல் அலீம் கான் மாகாணங்களைப் பிரிக்க ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், பிலாவல் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிந்து மாகாணத்தின் முதல்வரும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான முராத் அலி ஷா, ’மாகாணத்தைப் பிரிக்கவோ அல்லது மூன்றாகப் பிரிக்கவோ எந்தவொரு நடவடிக்கையையும் தனது கட்சி ஏற்றுக்கொள்ளாது’ என எச்சரித்துள்ளார்.
1947இல் பாகிஸ்தான் நாடு சுதந்திரம் அடைந்தபோது, கிழக்கு வங்காளம், மேற்கு பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (NWFP) மற்றும் பலுசிஸ்தான் என ஐந்து மாகாணங்களைக் கொண்டிருந்தன. இதில், 1971 விடுதலைப் போருக்குப் பிறகு கிழக்கு வங்காளம் சுதந்திரத்தைப் பெற்று வங்கதேசமாக மாறியது. அடுத்து, மேற்கு பஞ்சாப் மாகாணம்’ பஞ்சாப்’ என்றானது. வடமேற்கு மாகாணம் கைபர் பக்துன்க்வா என மறுபெயரிடப்பட்டது. சிந்து மற்றும் பலுசிஸ்தான் ஆகியவையே மாறாமல் உள்ளன.

