பாதுகாப்புப் படைகளின் தலைவராக அசிம் முனீருக்கு அங்கீகாரம்.. ஒப்புதல் அளித்த பாகிஸ்தான் அதிபர்!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கம், நாட்டின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைவராக (CDF) ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை அங்கீகரித்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏற்றவாறு அரசியல் சாசனத்தின் 243வது பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, ‘பாதுகாப்புப் படைகளின் தலைவர்’ என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூரால் இந்தியாவிடம் பாகிஸ்தான் கடும் பின்னடைவைச் சந்தித்த நிலையில் அனைத்துப் படைகளையும் வழிநடத்த வலுவான தளபதி தேவை என்ற நோக்கின் அடிப்படையில், இந்த முடிவானது எடுக்கப்பட்டது.
இந்த சக்திவாய்ந்த பொறுப்பு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கம், நாட்டின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைவராக (CDF) ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை அங்கீகரித்துள்ளது. இது பதவியில் இருக்கும் இராணுவத் தலைவருக்கு முன்னோடியில்லாத அதிகாரத்தை வழங்கும் மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் இராணுவ அதிகாரத்தை ஒரே சீருடையின்கீழ் முறையாக மையப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.
இதுகுறித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி வெளியிட்ட அறிவிப்பில், ’புதிதாக உருவாக்கப்பட்ட சி.டி.எஃப் அலுவலகத்திற்குப் பொறுப்பேற்கும் அதேவேளையில், முனீர் இராணுவத் தளபதியாக (COAS) தொடர்வார்’ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ’ஐந்து ஆண்டு காலத்திற்கு பாதுகாப்புப் படைகளின் தலைவராக, ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் என்ஐ(எம்), ஹெச்ஜே, நியமனம் செய்ய பிரதமர் சமர்ப்பித்த சுருக்கத்தை அதிபர் ஆசிப் அலி சர்தாரி அங்கீகரித்துள்ளார்’ என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபீல்ட் மார்ஷல் என்ற அரிய பதவிக்கு உயர்த்தப்பட்ட முனீர், பாகிஸ்தானின் வரலாற்றில் இரண்டு பதவிகளையும் ஒரே நேரத்தில் வகிக்கும் முதல் இராணுவ அதிகாரியாக மாறியுள்ளார். முன்னதாக, இதுதொடர்பான விவகாரத்தில் பிரதமருக்கும் ராணுவத் தலைமைக்கும் இடையே பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் முடங்கியது. தவிர, இதை அலைக்கழிக்கும் விதமாக பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் பல்வேறு அரசியல் பேரங்களைக் கடந்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஒருவரின் கையில் அடங்கியிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

