ஜப்பான் | அரிசி குறித்து சர்ச்சைப் பேச்சுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்!
ஜப்பானில் ஜூலை மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அந்நாட்டு வேளாண் துறை அமைச்சர் டக்கு எட்டோ, ”நான் எப்போதும் கடைக்குச் சென்று அரிசி வாங்குவதில்லை. எனது ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் எனக்கு அரியைப் பரிசாகக் கொடுப்பார்கள்” எனத் தெரிவித்தார். ஜப்பானில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில், டக்கு எட்டோவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தவிர, அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் மேலும் அதிகரித்தது. பிரதான எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜூன்யா ஒகாவா, ”எட்டோவின் கருத்துகள் மிகவும் பொருத்தமற்றது, தொடர்பில்லாதது மற்றும் சகிக்க முடியாதது" என்றார்.
டக்குவுக்கு எதிராக தொடர்ந்து கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியதால், அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். தவிர, பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர், “அரிசி விலை உயர்வால் மக்கள் போராடி வரும் நிலையில், அமைச்சராக மிகவும் பொருத்தமற்ற கருத்துகளை தெரிவித்ததற்காக மீண்டும் ஒருமுறை நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அரிசி விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் இந்த நேரத்தில் [விவசாய அமைச்சகத்தின்] தலைமைப் பொறுப்பில் நான் நீடிப்பது பொருத்தமானதா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன், அது இல்லை என்று முடிவு செய்தேன். ஆகையால், எனது ராஜினாமாவை பிரதமர் இஷிபாவிடம் சமர்ப்பித்தேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அரிசி தொடர்பாக தாம் பேசிய கருத்துகள் தனது மனைவியையும் கோபத்துக்கு ஆளாக்கியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
எட்டோ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரான ஷின்ஜிரோ கொய்சுமி அப்பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டக்கு எட்டோவின் இந்த சர்ச்சை கருத்துக்காக பிரதமர் இஷிபா மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.