லெஜியன்களை உருவாக்க விருப்பம்.. விந்தணுவை ஜப்பான் பெண்ணுக்கு அனுப்பிய எலான் மஸ்க்!
அதிகளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள நினைக்கும் எலான் மஸ்க்
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, 367.9 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநருமான எலான் மஸ்க், தற்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் அமைச்சரவையில் செயல்படும் DOGE துறையில் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 14 குழந்தைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, செயிண்ட் கிளேர், பாடகி கிரிம்ஸ், நியூராலிங்க் நிர்வாகி ஷிவோன் ஜிலிஸ் மற்றும் முன்னாள் மனைவி ஜஸ்டின் மஸ்க் ஆகிய நான்கு அறியப்பட்ட பெண்களிடமிருந்து குறைந்தது 14 குழந்தைகளுக்கு அவர் தந்தையாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று மஸ்க்கிற்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்புகின்றன.
இந்த நிலையில், ஒரு உயர் பதவியில் இருக்கும் ஜப்பானியப் பெண்ணுக்கு எலான் மஸ்க் தன்னுடைய விந்தணுக்களை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகில் மிகவும் புத்திசாலியான பிள்ளைகள் பலரைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்துடன் எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார் என ஏற்கெனவே செய்திகள் வெளியாகிவரும் நிலையில், தற்போது அவர் ரகசியமாகச் செய்து வரும் சில விஷயங்களை, ’தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், அதிகளவில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள எலான் மஸ்க் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறாராம். உலகம் முழுவதும் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இதுகுறித்து எலான் மஸ்க் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கப் புத்திசாலி மக்கள் அதிகக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதையும் அவர் நம்புகிறார். இதன் காரணமாகவே அவர் அதிகளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்.
குழந்தை பெற்றுக்கொள்ள ரகசியமாய்ப் போடப்படும் ஒப்பந்தங்கள்
இந்தச் சூழலில்தான் தனது எக்ஸ் தளம் மூலமாகவே குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பெண்களிடம் எலான் மஸ்க் தரப்பு அணுகி வருகிறதாம். வாடகைத் தாய் முறையில் எலான் மஸ்கிற்கு குழந்தைகளைப் பெற்றுத் தருவது குறித்து அவர்கள் பேசி வருகிறார்களாம். அதேநேரம், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளச் சம்மதிக்கும் தாய்மார்களிடம் எலான் மஸ்க் தரப்பு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிக்குமாம். அதாவது, குழந்தைகளைப் பராமரிக்கத் தேவையான தொகையை எலான் மஸ்க் தரப்பு தந்துவிடும். ஆனால், இதுதொடர்பான அனைத்துத் தகவல்களையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதே ஒப்பந்தமாகும். முன்னதாக, எலான் மஸ்க்குடன் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த பாடகி கிரிம்ஸ் இதுதொடர்பாகச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது தங்கள் குழந்தைகளுக்குப் பராமரிப்பு தொகை கோரி எலான் ஸ்கிற்கு எதிராக இவர் வழக்கு போட்டிருந்தார். இந்த வழக்கால், தான் பொருளாதார ரீதியாக மிக பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டதாக எலான் மஸ்க் குறிப்பிட்டார். இதுபோல பல குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்போது சட்டப் பிரச்னை வரக்கூடாது என்பதற்காகவே அவர் முன்கூட்டியே எல்லா ஒப்பந்தங்களையும் போட்டுக் கொள்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில்தான், சமீபத்தில் இதற்காக அவர் தனது விந்தணுக்களை ஜப்பானைச் சேர்ந்த பெண் பிரபலம் ஒருவருக்கும்கூட அனுப்பியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் ரகசியம் உடைத்த செயிண்ட் கிளேர்!
இதுபோல, பல பெண்களிடம் குழந்தை பெறுவது குறித்து எலான் மஸ்க் தரப்பு தொடர்புகொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான், எலான் மஸ்க்கின் குழந்தைக்கு தாயாக மறுத்ததாக, கிரிப்டோகரன்சி இன்ஃப்ளூயன்ஸரான Tiffany Fong என்பவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, எலான் மஸ்க் தரப்பு குழந்தைகள் விவகாரத்தில் ரகசியம் காக்க விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. இதையேதான் எலான் மஸ்க்கின் நெருங்கிய உதவியாளர் ஜாரெட் பிர்ச்சால் கூறியதாக செயிண்ட் கிளேரும் கூறியிருந்தார். இந்த செயிண்ட் கிளேர்தான் கடந்த ஆண்டு செப்டம்பரில் எலான் மஸ்க்கின் 13வது குழந்தையைப் பெற்றெடுத்ததாக சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். இதையடுத்தே அவர் பேசுபொருளானார்.
அப்போது எலான் மஸ்க் உடன் நடந்த உரையாடல் விவரங்களை கிளேர் பகிர்ந்திருந்தார். அதாவது, எலான் மஸ்க்தான் தந்தை என்பதைப் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடாமல் இருந்தால் முதலில் தனக்கு 15 மில்லியன் டாலரும், அதன்பிறகு மாதம் 100,000 டாலரும் தருவதாக ஜாரெட் பிர்ச்சால் கூறியதாக செயிண்ட் கிளேர் கூறியிருந்தார். ஆயினும், எலான் மஸ்க்தான் தந்தை என்பதில் ரகசியம் காக்க செயிண்ட் கிளேர் ஒப்புக்கொள்ளவில்லை. அதேநேரம் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எலான் மஸ்க் பெயரை அவர் பயன்படுத்தவில்லை. பொதுவெளியில், எலான் மஸ்க்தான் தந்தை எனக் கூறிவிட்டதால், அவருக்கான மாத ஆதரவு தொகை 100,000 டாலரில் இருந்து முதலில் 40,000 டாலராகவும் பிறகு 20,000 டாலராகவும் குறைக்கப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் கூறியுள்ளது.