உலகை அதிரச் செய்யும் 'எப்ஸ்டீன் கோப்புகள்'.. அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்.. பின்னணி என்ன?
அமெரிக்காவில் சமீபத்தில் வெளியான 'எப்ஸ்டீன் கோப்புகள்' எனப்படும் ரகசிய ஆவணங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு, தேசிய அளவில் விவாதமாகியுள்ளது.
சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம், இப்போது இந்திய அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் வெளியான 'எப்ஸ்டீன் கோப்புகள்' எனப்படும் ரகசிய ஆவணங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு, தேசிய அளவில் விவாதமாகியுள்ளது. யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்? எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன? இதில் இந்திய பிரதமரின் பெயர் ஏன் அடிபடுகிறது? விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு செல்வாக்குமிக்க அமெரிக்க நிதி ஆலோசகர். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். 2019ஆம் ஆண்டில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க அதிகாரிகளால் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். தனது செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் உலகளவில் பல மர்மங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.
கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க புலனாய்வாளர்கள் எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், தொடர்புப் பட்டியல்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவிலான தரவுகளைச் சேகரித்தனர். இவைதான் இப்போது, 'எப்ஸ்டீன் கோப்புகள்' என்று அழைக்கப்படுகின்றன. சமீபத்தில், அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆவணங்களின் புதிய தொகுப்பு பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இந்த ஆவணங்களில் ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே அவர் குற்றம் செய்தவர் என்று அர்த்தமல்ல என்று வல்லுநர்களும் புலனாய்வாளர்களும் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த ஆவணங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி இந்திய எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
குறிப்பாக, அவரது பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெளிநாட்டுப் பயணத்தின் அதிகாரப்பூர்வ கால அட்டவணை தொடர்பாகப் பிரதமரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் இதுகுறித்து பொதுவெளியில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்திய அரசு இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக நிராகரித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம், "இந்தக் குறிப்புகள் ஆதாரமற்றவை, வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்தவை மற்றும் ஒரு குற்றவாளியால் கிளப்பி விடப்பட்டதேவையற்ற வதந்திகள்" என்று தெரிவித்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளி, அவரது வழக்கு பல அதிகார வர்க்கத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இப்போது வெளியாகியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் அதன் ஒரு பகுதியே.

