H1B விசாவில் யூடர்ன் அடித்த ட்ரம்ப்.. உண்மை நிலவரம் என்ன.. தெளிவாக விளக்கிய அமெரிக்கா!
ஹெச்1பி விசா விவகாரத்தில், ட்ரம்ப்பின் திடீர் மனமாற்றம், அதன் கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ‘அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கை ரீதியில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்றாக, குடியேற்றத்தை தடுக்க, முறைப்படுத்த ஏகப்பட்ட விதிகளை மாற்றினார். சட்டவிரோத குடியேற்றம் மட்டுன்றி, சட்டப்பூர்வ குடியேற்றம் தொடர்பாகவும் அவர் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். குறிப்பாக, ஹெச்1பி விசா விவகாரத்தில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தினார். அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசா விண்ணப்பக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதாவது, H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன. இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது. ஆனால், ட்ரம்ப் அறிவித்த இந்த புதிய விதியால், இந்தியர்கள் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைக்காக அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்.1பி விசா குறித்து அதிபர் ட்ரம்ப் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யூடர்ன் அடித்திருந்தது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. அப்போது பேசிய அவர், “எனது நிர்வாகம் அமெரிக்கர்களுக்கே வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இருப்பினும் அமெரிக்கர்களுக்கு சில குறிப்பிட்ட துறைகளில் திறமை பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, அவர்கள் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது.
எனவே, வெளிநாடுகளில் இருந்து திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார்.
ட்ரம்ப்பின் இந்த திடீர் மனமாற்றம், ஹெச்1பி விசா விவகாரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், ”அதிபர் டொனால்டு ட்ரம்பின் புதிய H-1B விசா கொள்கை, வெளிநாட்டுத் தொழிலாளர்களை நீண்டகாலமாக சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, உயர்திறன் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தற்காலிகமாக அமெரிக்காவிற்கு அழைத்து வருவதாகும்” என்று கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “ஹெச்-1பி விசாக்களுக்கான ட்ரம்பின் புதிய அணுகுமுறை அமெரிக்காவின் உற்பத்தித் திறனை மீட்டெடுக்கும் அறிவு பரிமாற்ற முயற்சி. பல ஆண்டுகளாக வெளிநாடுகளையே சார்ந்திருந்த பிறகு, அமெரிக்க உற்பத்தித் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதே ட்ரம்பின் புதிய அணுகுமுறை. 20-30 ஆண்டுகளாக நாம் துல்லியமான உற்பத்தி வேலைகளை இங்கே செய்யவில்லை. இப்போது கப்பல் கட்டுமானம் மற்றும் செமி கண்டக்டர் தொழிலை அமெரிக்காவுக்கு மீண்டும் கொண்டுவர விரும்புகிறோம்.
எனவே, அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க அத்தகைய திறன்களைக் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை மூன்று, ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு இங்கு கொண்டுவருவதே அதிபரின் தொலைநோக்குப் பார்வை என்று நான் நினைக்கிறேன். இங்குள்ளவர்களுக்கு பயிற்சியளித்த பின்னர், அவர்கள் சொந்த நாட்டுக்குச் செல்லலாம். அதன்பிறகு அமெரிக்கத் தொழிலாளர்கள் இந்த வேலைகளுக்குப் பொறுப்பேற்பார்கள். ஹெச்-1பி விசா திட்டத்துக்கான ட்ரம்பின் புதிய அணுகுமுறை, முக்கியமான தொழில்களை அமெரிக்காவுக்கு திருப்பி கொண்டு வருவதற்கும், இறக்குமதிகளை நம்பியிருப்பதைக் குறைப்பதற்குமான முயற்சியே ஆகும்” என தெளிவுபடுத்தியுள்ளார்.

