H1B விசா கட்டணம் |தற்காலிகமாக வேலைகளை நிறுத்திய வால்மார்ட்!
அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான வால்மார்ட், H-1B விசா மூலம் வேலை வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசா விண்ணப்பக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ”H1B விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.90 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும்” என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பிறப்பித்திருந்தார்.
ஹெச்-1பி விசா காரணமாக வேலை இழக்கும் அமெரிக்கர்களை பாதுகாக்கவே விசா கட்டணம் உயர்த்தப்பட்டதாக அமெரிக்க அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் இது, செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 12 மாதங்கள் வரை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், அமெரிக்காவிலேயே இந்தக் கட்டண உயர்வுக்கு மருத்துவர்கள் வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தவிர, இதுதொடர்பாக அமெரிக்க வர்த்தக சபையும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
இதற்கிடையே, ஏற்கெனவே, ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கும், செப்டம்பர் 21ஆம் தேதிக்கு முன் ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தாது என்று அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை துறை தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல், ஏற்கெனவே இந்த விசா வைத்திருப்பவர்கள் விசாவை புதிப்பிக்க, நீட்டிக்க, அதன் நிலையை மாற்ற புதிய கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றும் ஹெச்1 பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு வெளியே பயணிக்க எந்தத் தடையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார்நிறுவனமான வால்மார்ட், H-1B விசாமூலம் வேலை வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இதனால், இந்தியர்கள் வால்மார்ட்டில் வேலை பெறுவது நெருக்கடிக்குஉள்ளாகி இருக்கிறது. அமெரிக்காவில் சில்லறை வர்த்தகத் துறையில் H-1B விசாக்களை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக வால்மார்ட் இருந்து வருகிறது. ட்ரம்ப் நிர்வாகம் அண்மையில் புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்திய நிலையில், விசா செலவை தவிர்க்க வால்மார்ட் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தக் கட்டணஉயர்வால், அமெரிக்க நிறுவனங்கள் பல, பணியமர்த்தல் உத்திகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.