இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பெரும்பங்கு வகிக்கும் ஹெரான் TP ரக ட்ரோன்கள், ராக்கெட்டுகள், நவீன ஆயுதங்கள்!

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் ஆயுதங்களே பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றை குறித்து விளக்குகிறது இத்தொகுப்பு
இஸ்ரேல் ஹமாஸ் மோதல்
இஸ்ரேல் ஹமாஸ் மோதல்pt web

உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்று இஸ்ரேல். ஆனால் ராணுவ பலத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாகவும் அது திகழ்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான ஆயுதங்கள்தான் இஸ்ரேல் படைகளின் அசுர பலத்திற்கு அடிப்படை.

குறிப்பாக இஸ்ரேலின் ட்ரோன்கள் சாதுர்யமாக உளவு பார்ப்பதற்கும் துல்லியமாக தாக்குவதற்கும் புகழ் பெற்றவை. குறிப்பாக ஹெரான் TP ரக ட்ரோன்கள் கண்காணிப்பு மற்றும் தாக்குதலில் சிறந்து விளங்கும். ஒரு டன் எடையுள்ள வெடிகுண்டுகளை சுமந்து கொண்டு எதிரிகளின் கண்ணில் மண்ணை தூவி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தாக்குதலை நடத்துபவை இந்த ஹெரான் ட்ரோன்கள். இது தவிர ஹெர்மஸ் - 450, ஹெர்மஸ் - 900 போன்ற ட்ரோன்களும் புகழ்பெற்றவை. இவற்றை இந்தியா உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பெரும் சேதத்தை விளைவிக்கும் ஸ்மார்ட் பாம்களும் உலகெங்கும் பெயர்பெற்றவை. எதிரிகள் சற்றும் எதிர்பாராத வகையில் புகை, சத்தம் ஏதுமின்றி அவர்கள் பகுதியில் விழுந்து பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை இஸ்ரேலின் கிரேவிடி பாம்கள் (GRAVITY BOMBS). F35 ரக விமானங்கள், மெர்க்காவா வகை பீரங்கிகளும் இஸ்ரேலுக்கு பலம் சேர்க்கும் ஆயுத தளவாடங்கள்.

இஸ்ரேலிற்கு எதிராக செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பும் ஏராளமான ஆயுதங்கள், படைபலத்துடன் விளங்குகிறது. ஹமாசின் மிகப்பெரிய பலம் ராக்கெட்டுகள்தான். இஸ்ரேலுக்கு எதிராக பெரும்பாலும் ராக்கெட்டுகளை கொண்டே ஆரம்ப காலம் தொட்டு ஹமாஸ் படையினர் சண்டையிட்டு வருகின்றனர். FAJR வகை ராக்கெட்டுகளை ஏராளமாக வாங்கிக்குவித்துள்ளது ஹமாஸ். கறுப்புச்சந்தைகளில் இருந்து இவர்கள் ஆயுதங்களை வாங்க ஈரானும் சிரியாவும் உதவிகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் கடத்தல் வாயிலாகவே ஹமாஸ் ஆயுதக்கொள்முதல் செய்கிறது. இஸ்ரேலின் கண்களில் இருந்து தப்பிப்பதற்காக கடல் வழியிலும் சுரங்கப்பாதைகளிலும் காசா பகுதிக்குள் ஆயுதங்களை ஹமாஸ் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் ஹமாஸ் குண்டுமழை பொழிவதையும் அங்கிருந்து வரும் வீடியோ காட்சிகளில் தெரிந்தகொள்ள முடிகிறது. இது தவிர பாரா கிளைடர் மூலமும் இஸ்ரேல் பகுதிக்குள் ஹமாஸ் படையினர் ஊடுறுவியுள்ளதும் தெரியவருகிறது. எல்லையிலுள்ள இரும்புவேலிகளை குண்டு வீசி தகர்த்தும் ஹமாஸ் படையினர் பைக்குகள் வாயிலாக இஸ்ரேலுக்குள் நுழைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2005இல் காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியதிலிருந்தே ஹமாஸ் தனது ஆயத பலத்தை பெருக்கி வந்த நிலையில் தற்போது அது முழு வீச்சிலான ஒரு தாக்குதலை நிகழ்த்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com