கடத்தப்பட்டாரா ஈரான் அதிபர்? பின்னணியில் உச்ச தலைவர் காமேனி? நாடு ஸ்தம்பிக்கும் ஆட்சி குழப்பம்!
ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கடத்தப்பட்டு, அடையாளம் தெரியாத ரகசிய இடத்தில் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் கொண்டு செல்லப்பட்டு, மொஜ்தபா காமேனியை சந்திக்க வைக்கப்பட்டதாக Iran International வெளியிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு மிகக் குறுகிய நேரம் மட்டுமே நீடித்ததாகவும், அவர் உண்மையில் காமேனிதானா என்ற சந்தேகம் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
செய்தியாளர் - M.மீரா
ஈரானில் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுக்கும் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனிக்கும் இடையே கடுமையான அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் அடையாளம் தெரியாத இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இருட்டடிக்கப்பட்ட காரில் மொஜ்தபா காமேனியை சந்திக்க வைக்கப்பட்டதாக Iran International வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, காமேனியை நேரில் சந்திக்க பெஷெஷ்கியன் பலமுறை கோரிக்கை விடுத்ததாகவும், ராஜினாமா செய்வதாக எச்சரித்த பின்னரே சந்திப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு பதிலாக, பாதுகாப்புப் படையினர் அவரை டெஹ்ரானில் உள்ள ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்திப்பு மிகவும் ரகசியமாக நடைபெற்றதாகவும், அருகில் இருந்த நபரை பெஷெஷ்கியனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்றும் அந்த ஊடக செய்தி கூறுகிறது.
சில நிமிடங்கள் மட்டுமே உரையாட அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த நபர் உண்மையில் மொஜ்தபா காமேனிதானா என்று பெஷெஷ்கியன் தனது உதவியாளர்களிடம் கேட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.
இதற்கிடையே, மே 31 அன்று பெஷெஷ்கியன் உச்ச தலைவர் அலுவலகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியதாகவும் Iran International செய்தி வெளியிட்டது. அரசின் முக்கிய முடிவெடுப்புகளில் அதிபரும் அமைச்சரவையும் புறக்கணிக்கப்பட்டு, IRGC-யின் தீவிரவாதப் பிரிவுகள் அதிக கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளதாக அந்தக் கடிதத்தில் பெஷெஷ்கியன் குற்றம்சாட்டியதாக கூறப்பட்டது. ஆனால், ஈரான் அரசு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இதுவரையில் பெஷாஷ்கியான் 28 முறை ராஜினாமா செய்ய முயன்றதாக காமேனியின் குடும்ப உறவினர் ஒருவர் கூறியதாகவும் ஈரான் இன்டர்நேஷனல் மேற்கோள் காட்டியுள்ளது.
இதனால் ஒருபுறம், போரின் பின்னணியில் IRGC-யின் செல்வாக்கு அதிகரித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம் குறைந்து வருகிறதா? என்ற கேள்வி எழுகிறது. மறுபுறம், பெஷெஷ்கியன் கடத்தப்பட்டார் என்ற தகவல் இதுவரை உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளாகவே உள்ளன. இருப்பினும், ராஜினாமா குறித்த செய்திகள் மற்றும் அரசுத் தரப்பின் மறுப்புகள், ஈரானின் அதிகார மையத்தில் உருவாகியுள்ள ஆழமான அரசியல் பிளவை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.

