“30 நாள் போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்கிறோம்.. ஆனால்..” - சந்தேக கேள்விகளுடன் ரஷ்யா பச்சைக்கொடி!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, இந்தப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். அந்த வகையில், முதல்படியாக 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ரஷ்யா இன்னும் பிடிகொடுக்காமல் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, ரஷ்யாவுடன் நேரில் பேச தனது 4 பிரதிநிதிகளை மாஸ்கோவுக்கு ட்ரம்ப் அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து, ரஷ்யா 30 நாள் போர் நிறுத்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து புதின், ”அமெரிக்காவும் உக்ரைனும் பேச்சுவாா்த்தை நடத்தி முன்வைத்துள்ள போா் நிறுத்த திட்டத்தை ரஷ்யா கொள்கை அளவில் ஆதரிக்கிறது. இருந்தாலும், இந்த விவகாரத்தில் தீா்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஏற்படக்கூடிய அமைதி நிரந்தரமாக இருக்க வேண்டும். அதற்கு, இந்தப் போருக்கான அடிப்படை காரணம் களையப்பட வேண்டும். தற்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே உள்ள 2,000 கி.மீ. போா் முனையில் ரஷ்யா தொடா்ந்து முன்னேற்றம் கண்டுவருகிறது.
இந்தச் சூழலில் 30 நாள்களுக்கு போரை நிறுத்துவதால், அந்த நேரத்தைப் பயன்படுத்தி உக்ரைன் தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும். கூடுதல் ஆயுதங்களை தருவித்துக்கொள்ளும். ரஷ்யாவும் அதேபோல் ராணுவ வலிமையை கூட்டிக் கொள்ளும். இதனால் இந்த தற்காலிக போா் நிறுத்தம் நிரந்தரத் தீா்வைத் தராது. இந்தப் போா் நிறுத்தத்தில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால் அது மீறப்படாமல் இருப்பதை யாா் கண்காணிப்பது என்பது போன்ற இந்த சிக்கல்கள் தீா்க்கப்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க சகாக்களுடன் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதிபர் ட்ரம்பிடமும் விவாதிக்க இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுதொடர்பாக பதிலளித்துள்ள அமெரிக்கா, ”எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் ரஷ்யா போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. மறுபுறம், ரஷ்யா போரை இழுத்தடிப்பதாக உக்ரைன் அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.