DOGE அமைப்பிலிருந்து விலகிய விவேக் ராமசாமி.. காரணம் என்ன?
அமெரிக்க அரசின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் DOGE என்ற அமைப்பை ட்ரம்ப் ஏற்படுத்தியிருந்தார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தலைமையில் இந்த அமைப்பு செயல்பட்டு வந்த நிலையில், DOGE அமைப்பின் பொறுப்பில் இருந்து விவேக் ராமசாமி விலகியுள்ளார். தனது எக்ஸ் வலைதளத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள விவேக் ராமசாமி, ”எலான் மஸ்க் மற்றும் அவரது குழு DOGE அமைப்பை திறம்பட வழிநடத்தும்” எனக் கூறியுள்ளார். ”ஓஹியோ மாகாணத்தில் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்பேன்” என்றும் விவேக் ராமசாமி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கான தேர்தலில் விவேக் ராமசாமி போட்டியிடக் கூடுமென்பதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நவம்பர் மாதம் ஆளுநர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட 39 வயதான விவேக் ராமசாமி முனைப்பு காட்டினார். ஆனால் அந்த வாய்ப்பு டொனால்டு ட்ரம்ப்புக்கு சென்றுவிட்டது. எனினும் ட்ரம்ப், தம்முடைய அரசில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முக்கிய துறையை எலான் மஸ்க்குடன் இணைந்து நிர்வகிக்கும் பொறுப்பை விவேக் ராமசாமிக்கு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.