பலுசிஸ்தானைத் தொடர்ந்து ’சிந்து’வில் எழுந்த தனி நாடு கோரிக்கை.. பாகிஸ்தானில் வெடித்த வன்முறை!
பாகிஸ்தானில், தனி சிந்துதேசம் கோரி போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கியதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. வன்முறை தொடர்பாக குறைந்தது 45 பேர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
”சிந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், நாகரிகத்தின் பார்வையில் அது எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். எல்லைகள் மாறலாம், யாருக்கு தெரியும்? நாளை சிந்து மீண்டும் இந்தியாவுக்கு வரலாம்" என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த மாத இறுதியில் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு பாகிஸ்தான் அப்போதே தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தாலும், அந்த விவகாரம் இப்போது அந்நாட்டிலேயே புயல் வீச வைத்துள்ளது.
பாகிஸ்தானில் சிந்தி கலாச்சார தினமான கடந்த டிசம்பர் 7ஆம் தேதி, தனி சிந்துதேசம் கோரி போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கியதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. கராச்சியில் தனி சிந்துதேசம் கோரி நடைபெற்ற இப்போராட்டம் வன்முறையாக மாறியதுடன் கல்வீச்சு, நாசவேலை மற்றும் போலீசாருடன் கடுமையான மோதலுக்கு வழிவகுத்தது. போராட்டக்காரர்களின் பேரணிப் பாதையைக் காவலர்கள் திருப்பிவிட்டதால் பதற்றம் அதிகரித்து அவர்களைக் கோபப்படுத்தியதுடன் வன்முறைக்கும் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. வன்முறை தொடர்பாக குறைந்தது 45 பேர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகாலமாக, சிந்தி அமைப்புகள் மாகாணத்தில் தொடர்ச்சியான அரசியல் அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களைக் கூறி வரும் நிலையில், தற்போது 'பாகிஸ்தான் முர்தாபாத்' என்ற கோஷங்களுடன், சிந்து விடுதலைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது சிந்து தேசியவாதக் கட்சிகளின் நீண்டகால உணர்வை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாடு கடத்தப்பட்ட தலைவர் ஷாஃபி பர்பத் தலைமையிலான JSSM, ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு சிந்து தேசத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. தவிர, சிந்து மாகாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை மேற்கோள் காட்டி, JSSM தனது கோரிக்கையை ஆதரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பேரிலேயே இந்தப் பேரணி அமைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், சிந்து மாகாணம் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவளிக்க அங்கிருக்கும் அமைப்புகள் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள், பாகிஸ்தானுக்குள் சுயாட்சி அல்லது சுதந்திர சிந்துதேசம் உருவாவதைத்தான் விரும்புகின்றனர்.
காலனித்துவ காலத்தில், சிந்து மாகாணம் பிரிட்டிஷ் இந்தியாவின்கீழ் ஒரு தனி நிர்வாகப் பகுதியாக இருந்தது. பின்னர் 1947 பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இணைந்தது. பிரிவினைக்குப் பிறகு இந்தியா ஏற்றுக்கொண்ட தேசிய கீதத்திலும் சிந்துவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிவினையின் முதல் ஆதரவாளர்களில் ஒருவரான ஜி.எம். சையத் மற்றும் பிர் அலி முகமது ரஷ்டி ஆகியோரின் தலைமையில் 1967ஆம் ஆண்டு தனி சிந்து தேசத்திற்கான முதல் கோரிக்கை தொடங்கியது. 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்குப் பிறகு இது வேகம் பெற்றது. பாகிஸ்தானில் பலுசிஸ்தான், பஞ்சாப் மாகாண எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்த சிந்து தேசம், இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான் மாநில எல்லைகளையும் பகிர்ந்துகொள்கிறது. இம்மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோமீட்டர் ஆகும். மொத்த மக்கள்தொகை சுமார் 5.5 கோடி ஆகும். இந்த மாகாணத்தில் உள்ள 30 மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் 91.3 சதவீதமும் இந்துக்கள் 6.5 சதவீதமும் உள்ளனர். தற்போதைய சிந்து மாகாணம், பண்டைய இந்தியாவின் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. மேலும் இங்குள்ள சிந்து நதியின் காரணமாக இந்தப் பகுதி எப்போதும் வளமானதாக இருந்து வருகிறது. முன்னதாக, பாகிஸ்தான் மாகாணங்களில் ஒன்றான பலுசிஸ்தானும், தனி நாடு கேட்டு போராடி வருகிறது குறிப்பிடத்தக்கது.

