பிலிப்பைன்ஸ் | ”உயிருடனோ அல்லது கொன்றோ பிடித்தால்..” டெங்குவை தடுக்க அடடே ஐடியா!
பிலிப்பைன்ஸ் தலைநகர் பகுதியில் உள்ள கிராமம் ஒன்று டெங்குவை எதிர்த்துப் போராட ஒரு வித்தியாசமான முயற்சியைகையில் எடுத்துள்ளது. அதாவது இறந்த அல்லது உயிருடன் பிடிக்கப்பட்ட கொசுவை கொண்டு வருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மண்டலுயோங் நகரில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பபிருதியில் உள்ள அடிஷன் ஹில்ஸ் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அருகிலுள்ள நகரமான கியூசான் இதனை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது. மேலும், குறைந்தது எட்டு பகுதிகளில் டெங்கு தொற்றுகள் அதிகரித்து இருப்பதால் இந்த வினோத முயற்சியை கையிலெடுத்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை தரவுகளின்படி, பிப்ரவரி 1 ஆம் தேதி நிலவரப்படி பிலிப்பைன்ஸில் குறைந்தது 28,234 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் பதிவான டெங்குவை விட 40% இது அதிகமாகும். கியூசான் நகரில் மட்டும் பதிவான 1,769 வழக்குகளில் இறந்த 10 பேரில் பெரும்பாலும் குழந்தைகளே அதிகம்.
டெங்குவைத் தடுக்க, அடிஷன் ஹில்ஸ் பகுதிகளில் ஏற்கனவே சுத்தம் செய்தல், கால்வாய் அடைப்புகளை நீக்குதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்துதல் போன்றவற்றை தொடங்கியது. ஆனாலும் டெங்கு பாதிப்பு 42 ஆக உயர்ந்து, இரண்டு இளம் மாணவர்கள் இறந்ததால், அந்த கிராமத் தலைவர் கார்லிட்டோ செர்னல் டெங்குவை தடுக்க மேலும் நடவடிக்கை தேவை என்று முடிவு செய்துள்ளார். அதற்கான புதிய திட்டத்தையும் தொடங்கினார்.
இந்தத் திட்டத்தின் கீழ், கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ கொண்டு வந்தால் அதற்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தாங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு ஐந்து கொசுக்கள் அல்லது கொசு லார்வாக்களுக்கும் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ (ஒரு சென்ட் மட்டுமே) பெறுகிறார்கள்.
அதே நேரத்தில், மக்கள் வெகுமதியைப் பெறுவதற்காக கொசுக்களை இனப்பெருக்கம் செய்யத் தொடங்கினால், இந்தத் திட்டம் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும், கிராமத் தலைவர் செர்னல் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தால், இந்த திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என கூறியிருக்கிறார்.
திட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து ஒரு சிலர் கொசுவை பிடித்து கிராம அலுவலகத்திற்கு வந்துள்ளனர். 64 வயதான துப்புரவுத் தொழிலாளி மிகுவல் லாபக் என்பவர், 45 கொசு லார்வாக்கள் கொண்ட ஒரு குடத்தை ஒப்படைத்து ஒன்பது பெசோக்களை (15 சென்ட்) சன்மானமாக பெற்றார். சன்மானத்தை பெற்றுக்கொண்ட லாபக், இது எனக்கு பெரிய உதவி. இதில் நான் ஒரு காபி குடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
கொசுவுக்கு சன்மானம் அளிக்கும் இந்த விநோத அறிவிப்பு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.