போருக்கு தயாராகும் அமெரிக்கா..? முப்படைகளையும் களமிறக்கிய வெனிசுலா., விமானங்களை ரத்து செய்த நாடுகள்!
கரீபியன் கடல் வழியாக லத்தின் மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்துஅமெரிக்காவுக்குள் அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படி கடத்தப்பட்டு வரும் போதைப் பொருட்கள் அனைத்தும் அமெரிக்காவுக்குள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், வெனிசுலா நாட்டில் இருந்து போதைப் பொருள் அதிகம் கடத்தப்படுவதாகவும் இதற்கு பின்னணியில் சீனா இருப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அதுமட்டுமின்றி, ஒருபக்கம் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சர்வதேச கடல் எல்லையில் நீர்முழ்கி கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் போதைப்பொருள் கடத்தி வந்த கப்பலை அமெரிக்க கடற்படை வீரர்ககள் சுட்டு வீழத்தினர்.
இந்நிலையில் தான், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார். கப்பல்களில் பயணித்தவர்கள் மீனவர்களும், தொழிலாளர்களும்தான், இது தெரியாமல் சர்வதேச சட்டத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக, கரீபியன் கடற்பகுதியில் போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை போருக்கான அறிகுறி என குற்றம்சாட்டிய வெனிசுலா தங்கள் நாட்டின் ராணுவப்படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது.
இப்படி பரபரப்பான சூழலுக்கு மத்தியில், வெனிசுலாவில் சிறப்பு அவசரநிலையை அதிபர் நிகோலஸ் அறிவித்துள்ளார். 'பிளான் இன்டிபென்டென்சியா 200' என்ற திட்டத்தின் கீழ் முப்படைகளையும் பலப்படுத்தும் நடவடிக்கையில் வெனிசுலா இறங்கியுள்ளது.இதனால் அமெரிக்கா- வெனிசுலா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது..
இந்த சூழலில், ராணுவ நடவடிக்கைகள் காரணமாக, வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பதற்றம் காரணமாக வெனிசுலாவுக்கான விமானங்களை பல நாடுகள் ரத்து செய்துள்ளன. குறிப்பாக, ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில்,உள்ளிட்ட பல நாடுகள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இதில், ஆறு விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

