உக்ரைன் விவகாரம் | ”பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால்..” - புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில், ”உக்ரைன் விவாகரத்தில் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க வாய்ப்பிருப்பிருக்கிறது” என அமெரிக்க டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர், “மத்திய கிழக்கிற்கு செல்வது குறித்து ஆலோசித்து வருகிறேன். ஆனால் உடனடியாக செல்லப் போவதில்லை. தான் இல்லாவிட்டால், இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்திருக்காது.
ரஷ்ய அதிபர் புதினை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார். உக்ரைன் விவாகரத்தில் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வாய்ப்பிருக்கிறது. புதினுடன் விரைவில் பேச உள்ளேன்" என்றார்.
தொடர்ந்து அவர், “போர் ஒருபோதும் தொடங்கி இருக்கக் கூடாது. திறமையான அதிபர் இருந்திருதால் போர் நடந்திருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைனில் ஒருபோதும் போர் நடந்திருக்காது. புதினுடன் எனக்கு மிக வலுவான புரிதல் இருந்தது. மக்களை அவமதித்த பைடனை, புதின் அவமதித்தார். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள், இது ஒரு கொடூரமான சூழல். பெரும்பாலானோர் ராணுவ வீரர்களாக மாறிவிட்டார்கள். நகரங்கள் இடிந்த இடங்களாக காணப்படுகிறது.
உக்ரைனில் அறிவிக்கப்பட்டதைவிட அதிகளவிலான மக்கள் பலியாகியுள்ளனர். புதினுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். அமைதியை விரும்புவதாக உக்ரைன் அதிபர் என்னிடம் கூறினார். இருதரப்பினரையும் எந்த நேரத்திலும் சந்திப்பேன். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தடுக்க விரைவில் முடிவு காண விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்ட அவர், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, கூடுதலாக 10 சதவீத வரி விதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் ட்ரம்ப் கூறினார்.