டாலருக்கு எதிராய் புதிய நாணயம்.. பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப, பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவை முன்னேற்றும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், பொருளாதாரரீதியாகவும் அமெரிக்காவை முன்னேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், டாலர் விஷயத்தில் மீண்டும் அதிரடி காட்டியுள்ளார். பிரிக்ஸ் நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதில், “பிரிக்ஸ் நாடுகள் டாலரில் இருந்து விலகிச் செல்ல முயல்கின்றன. எதிரியாகத் தோன்றும் இந்த நாடுகளிடம் இருந்து ஒரு புதிய BRICS நாணயத்தை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்தப் புதிய நாணயத்தையோ முன்னிறுத்தவதையோ ஆதரிக்க மாட்டோம். அப்படி நடந்தால், 100 சதவிகித வரியை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை முன்னிறுத்த முயற்சிக்க மாட்டோம் என்ற உறுதிமொழி எங்களுக்குத் தேவை. அமெரிக்க டாலருக்குப் பதிலாக பிரிக்ஸ் நாடு வர வாய்ப்பில்லை” என அவர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக, அவர் பதவியேற்பதற்கும் முன்பும் இதே போன்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, “பிரிக்ஸ் நாடுகள் வேறு நாணயத்தை முன்னிறுத்தினால், அற்புதமான அமெரிக்கப் பொருளாதாரத்தில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் இருந்து விடைபெற வேண்டும். அவர்கள் வேறு நாட்டில் விற்பனை செய்துகொள்ளலாம். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மாற்றுவது பிரிக்ஸ் கூட்டமைப்பால் முடியாது. அவ்வாறு செய்யும் எந்த நாடும் அமெரிக்காவிடம் இருந்தும், அனைத்து வர்த்தகத்தில் இருந்தும் விடைபெற வேண்டும்” என அவர் எச்சரித்திருந்தார்.
வளர்ச்சிப் பாதையில் இருக்கும் பொருளாதாரங்களின் ஒரு கூட்டமைப்பே, பிரிக்ஸ் (BRICS) எனப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பில் தொடக்கம் முதல் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா (2010) ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால், சமீபகாலமாக இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டாலரின் மதிப்பீட்டைக் குறைக்கவும், அதற்கு நிகராக பிரிக்ஸ் கூட்டணிக்கு என பொதுவான நாணய மதிப்பை உருவாக்கவும் அக்குழு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.