உக்ரைன் போர் |புடினின் யோசனையை நிராகரித்த ஜெலன்ஸ்கி.. ட்ரம்ப் அளித்த உறுதி!
உக்ரைன் - ரஷ்யா ஆகிய நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கவனம் செலுத்தி வருகிறார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் போரில் நேரிடையாக தலையிடாது என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். மறுபுறம், ஜெலன்ஸ்கி மற்றும் புதின் இடையே சந்திப்பு நடைபெறலாம் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.
ட்ரம்பை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய ஜெலன்ஸ்கி
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், உலக நாடுகள் உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான வரலாற்றுச் சந்திப்பு அலாஸ்காவில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற்றது.
உலகளவில் பெருத்த எதிர்பார்ப்பை இந்தச் சந்திப்பு நிகழ்த்தியபோதும் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் முடிவு தொடர்பாக எதுவும் எட்டப்படவில்லை. எனினும், ட்ரம்பிடம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது புதின் சில முக்கியமான கோரிக்கையை வைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நிராகரித்த ஜெலன்ஸ்கி.. உறுதியளித்த ட்ரம்ப்
இதைத் தொடர்ந்து, முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இதுகுறித்து அவர், “நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராக இல்லை. எனினும் அந்த நாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். குறிப்பாக உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வோம். உக்ரைனுக்கு அமெரிக்க வீரர்களை அனுப்புவது குறித்து பரிசீலனை செய்யப்படும். இதுவரை 6 போர்களை நிறுத்தி உள்ளேன். தற்போது ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரையும் நிறுத்துவேன். ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எப்போது போர் நிறைவடையும் என்பதை இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மாஸ்கோவில் சந்திப்பு நடத்த ரஷ்ய அதிபர் புடின் முன்மொழிந்துள்ளார். ஆனால், மாஸ்கோ சந்திப்பு குறித்த புடினின் யோசனையை ஜெலன்ஸ்கி நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைன் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடாது என ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணைவதும், கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யாவிடம் இருந்து மீட்பதும் சாத்தியமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை உக்ரைன் கைவிட்டால், போர் முடிவுக்கு வருமென தான் நம்புவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.