போரை நிறுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை அவசியம்.. ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு, ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முக்கிய முயற்சியாக அமைந்தது. ட்ரம்ப், புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உக்ரைனிய கைதிகளை விடுவிக்க எதிர்பார்க்கிறார். ஜெலன்ஸ்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன், உக்ரைனில் சுயாதீன தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், உலக நாடுகள் உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான வரலாற்றுச் சந்திப்பு அலாஸ்காவில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற்றது.
உலகளவில் பெருத்த எதிர்பார்ப்பை இந்தச் சந்திப்பு நிகழ்த்தியபோதும் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் முடிவு தொடர்பாக எதுவும் எட்டப்படவில்லை. எனினும், ட்ரம்பிடம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையினபோது புதின் சில முக்கியமான கோரிக்கையை வைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்பை நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் ஜெலென்ஸ்கியுடன் ட்ரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். போர் முடியும் வரை ராணுவ உடையில் வருவேன் என தெரிவித்த ஜெலன்ஸ்கி இம்முறை கோட் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய ட்ரம்ப், “புடின், ஜெலென்ஸ்கி ஆகியோருடன் ஒரே இடத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் மக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்காகவே உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படும். முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு சுமார் 1,000க்கும் மேற்பட்ட உக்ரேனிய கைதிகளை புடின் விடுவிப்பார் என்று தான் எதிர்பார்க்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய ஜெலன்ஸ்கி, ”போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவி தேவை. முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தான் தயார். உக்ரைனில் யாருடைய தலையீடும் இல்லாமல் தேர்தல் நடைபெற வேண்டும்“ என வலியுறுத்தினார்.
இதற்கிடையே, “ரஷ்யா-உக்ரைன் இடையேயான சிக்கலில் சுமூகத் தீர்வு எட்டப்படுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்” என அதிபர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “உக்ரைன் உடனான சிக்கலுக்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.