இந்திய தேர்தல் நிதி | பற்றவைத்த ட்ரம்ப்.. பாஜக - காங்கிரஸ் மோதல்!
அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவராக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உள்ளார். அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. இதன்மூலம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் எலான் மஸ்க்கிற்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மறுபுறம், பிற நாடுகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த நிதியுதவியையும் அத்துறை ரத்து செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட 21 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.182 கோடி) நிதியுதவியை, அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (DOGE) ரத்து செய்தது. இதுதொடர்பாக பாஜக - காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மோதல் நிலவியது. ”இந்திய தேர்தல்களில் அமெரிக்காவுக்கு என்ன வேலை" என கேள்வி எழுப்பிய பாஜக, இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை குற்றஞ்சாட்டியது. இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது.
இந்த நிலையில், ”இந்தியாவில் குறிப்பிட்ட நபரை ஆட்சியில் அமர்த்துவதற்காகவே பைடன் அரசு நிதியுதவி தந்தது” என சந்தேகிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்ரம்ப், “இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்கா ஏன் 180 கோடி ரூபாய் தர வேண்டும். இந்தியாவில் தனக்கு வேண்டப்பட்டவர் ஆட்சியில் அமர பைடன் செய்த முயற்சியாகவே இது தனக்கு தோன்றுகிறது. இதுகுறித்து இந்திய அரசிடம் தங்கள் அரசு தெரிவிக்க உள்ளது” என அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் இந்திய அரசியலில் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. ”2024 தேர்தலில் மோடியை தோற்கடிக்க வெளிநாட்டு சதி நடந்தது ட்ரம்ப்பின் பேச்சில் உறுதியாகி உள்ளது” என பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் ”இவ்விவகாரத்தில் உண்மை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசின் உதவிகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்” என்றும் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.