”இதில் மட்டும் ஆர்வம் ஏன்?” அதானி வழக்கை அமெரிக்கா விசாரிப்பதை சாடிய ட்ரம்ப் கட்சி எம்.பி.!
”முறைகேடு குற்றச்சாட்டில் இந்திய தொழிலதிபர் அதானியை விசாரித்தால் அந்நாட்டுடனான உறவுகள் சீர்குலையும்” என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து குடியரசு கட்சி எம்.பி.யான லான்ஸ் கூடன் அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் மெரிக் கார்லாண்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”சில குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான வழக்குகளில் மட்டும் அரசு ஆர்வம் காட்டுவதன் அவசியம் என்ன? இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் வலுவான கூட்டாளிகளாக உள்ள நிலையில் இதுபோன்ற வழக்குகள் இருநாட்டு உறவை சீர்குலைக்கும்” என அதில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிகாரத்தை குடியரசு கட்சி கைப்பற்ற உள்ள நிலையில், அக்கட்சி எம்.பி.யின் இக்கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் கொடுக்க கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்தது. இந்த லஞ்சம் 2020 முதல் 2024 வரை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக, அதானி தனிப்பட்ட முறையில் சந்தித்து, லஞ்சம் தருவது தொடர்பாகப் பேசியதாகவும், அதேபோல், அதிகாரிகளுடன் சாகர் அதானி தொலைபேசியில் பேசியதாகவும் அதற்கான ஆதாரங்களை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அதானி லஞ்ச புகார் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் சமீபத்தில் நடத்த உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ”டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்க குற்றச்சாட்டுகள் கைவிடப்படலாம்” என இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ரவி பத்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில் தான் ட்ரம்ப் கட்சியைச் சேர்ந்த எம்பி இந்தக் கருத்தினை முன் வைத்துள்ளார்.