அகமதாபாத் விமான விபத்து | விடுப்பில் சென்ற 112 விமானிகள்.. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் தகவல்!
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அதேநேரத்தில், இந்த விமான விபத்து தொடர்பாக புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தியது. அதன்படி, இதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. ’இரண்டு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள், 1 வினாடி இடைவெளியில், உயரத்தில், ஒன்றன்பின் ஒன்றாக கட்ஆஃப் நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளது’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அதுதொடர்பான விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட விமானிகள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. விபத்துக்குப் பிறகு அடுத்த நான்கு நாட்களில் விடுப்பு எடுத்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மருத்துவ விடுப்பு எடுத்தவர்களில் 51 கேப்டன்கள் (பைலட் இன் கமாண்ட்) மற்றும் 61 விமானிகள் ஆகியோர் அடங்குவர் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் மக்களவையில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ”விமான விபத்திற்குப் பிறகு, ஏர் இந்தியா தனது விமானக் குழுவினரால் பெருமளவில் உடல்நலப் பாதிப்புகளை அனுபவித்து வருகிறது என்பது உண்மையா, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அந்த அதிர்ச்சிக்குப் பிறகு மனநலம் சார்ந்த தீர்வு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதா” எப பாஜக எம்பி ஜெய் பிரகாஷ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு “மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது பணியாளர்களின் மன ஆரோக்கியத்தை விரைவாக மதிப்பிடுவதற்குத் தேவையான வழிமுறைகள் இருக்க வேண்டும்” என்று அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், பிரச்னைகள் ஏற்பட்டால் விமானக் குழுவினர் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உதவ சக ஆதரவு குழுக்களை அமைக்க அப்போது பரிந்துரைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சராசரியாக, 1,700 விமானிகளைக் கொண்ட ஏர் இந்தியாவில், தினமும் 50 பேர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக, இந்த விஷயத்தை நன்கறிந்த பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.