அதிரடியில் இறங்கிய ட்ரம்ப் நிர்வாகம்.. சட்டவிரோதமாக நுழைந்த 500க்கும் மேற்பட்டோர் கைது!
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையும் ஒன்று. அதாவது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளார். விரைவில் இங்கு, தடுப்புச் சுவர் அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், குடியேற்றக் கொள்கை உள்ளிட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதையடுத்து, சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் குறித்து கணக்கெடும் பணி தொடங்கியது. அதன்படி முதற்கட்டமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “ட்ரம்ப் நிர்வாகம் 538 சட்டவிரோத குடியேறிய குற்றவாளிகளை கைது செய்துள்ளது. அதில், நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்ற குற்றவாளிகளை ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது. வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடந்து வருகிறது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது” என்றுள்ளார்.