ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்.. தொடங்கிய பேச்சுவார்த்தை.. ஒதுக்கப்பட்ட உக்ரைன்!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் டொனால்டு ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் போர்நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையிலான அதிகாரிகள் ரியாத் நகரில் ஆலோசனையை தொடங்கினர். ஆனால், உக்ரைன் சார்பில் எந்த அதிகாரிகளும் கலந்து கொள்ளவில்லை. இதனிடையே, தங்களுடன் ஆலோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்க முடியாது எனவும், இதுதொடர்பாக ட்ரம்பிடம் பேச இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் விளாடிமிர் புடின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர், “தேவைப்பட்டால் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக புதினே கூறினார். இருப்பினும் ஜெலன்ஸ்கி வகிக்கும் அதிபர் பதவியின் சட்டப்பூர்வமான தன்மை கேள்விக்குறிதான். ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு அதிபர் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இருப்பினும், உக்ரைன் சட்டத்தின்படி, ராணுவச் சட்டம் அமலில் இருக்கும்போது அதிபர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
ரஷ்யா பல சந்தர்ப்பங்களில் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ரஷ்யா அவரை ஒரு சட்டப்பூர்வமான அதிபராக் கருதவில்லை. உக்ரைன் நேட்டோவின் அங்கமாக மாறுவதைத் தொடர்ந்து எதிர்ப்போம். ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது தொடர்பாக ரஷ்யாவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இது அந்த நாட்டின் இறையாண்மை உரிமை. யாரும் மற்றொரு நாட்டிற்கு ஆணையிட முடியாது. நாங்கள் அவ்வாறு செய்யத் திட்டமிடவில்லை. ஆனால் பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் ராணுவ கூட்டணி என்று வரும்போது நிலைமை மாறலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.