”ரஷ்யா மிகப்பெரிய சக்திவாய்ந்த போர் இயந்திரங்களை வைத்துள்ளது” - டொனால்டு ட்ரம்ப்
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் டொனால்டு ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, விரைவில் இந்த நாடுகளுக்குள் சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ”ரஷ்யா மிகப் பெரிய, சக்திவாய்ந்த போர் இயந்திரங்களை வைத்துள்ளது” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக சவூதி அரேபியாவில் சந்திக்க உள்ள நாடுகளின் அதிகாரிகள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மிக விரைவில் சந்திக்க உள்ளனர். அதற்கான நேரம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் அது மிக விரைவில் இருக்கலாம்.
இந்த வாரம் ரியாத்தில் நடைபெறுவதற்கன சாத்தியக் கூறுகள் உள்ளன. ரஷ்யா மிகப் பெரிய, சக்திவாய்ந்த போர் இயந்திரங்களை வைத்துள்ளது. அவர்கள் ஹிட்லரையும் நெப்போலியனையும் தோற்கடித்தவர்கள். ரஷ்யா நீண்டகாலமாக போர் செய்து வருகிறது. ஆனால் புடின், உக்ரைனில் சண்டையிடுவதை விரைவில் நிறுத்த விரும்புகிறார். ரஷ்யாவின் மோதல் போக்கு தொடர்ந்தால், அது எனக்கு ஒரு பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.