கடும் தட்டுப்பாடில் அமெரிக்க ராணுவம்.. ட்ரம்பால் கடலில் தத்தளிக்கும் வீரர்கள்!
ஈரான் மீதான ராணுவ முற்றுகையை வலுப்படுத்துவதற்காக ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சுமார் 10,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படை வீரர்களுக்குப் போதிய உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கக் கடற்படை மற்றும் விமானப் படைக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் Military Mail தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதே இந்த நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் கடந்த திங்கள்கிழமை முதல் ஈரான் மீதான முழுமையான கடல்வழி முற்றுகை அமலுக்கு வந்தது. இந்த நடவடிக்கையில் 12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இக்கப்பல்களில் இருக்கும் ராணுவத்தினர் மற்றும் கடற்படையினருக்கு இப்போது உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக இத்தகைய நீண்ட கால ராணுவ நடவடிக்கைகளின் போது, வீரர்களுக்கான உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விமானங்களின் மூலமே விநியோகிக்கப்படும். ஆனால், தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக Mail சேவை போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், கப்பல்களில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் வேகமாகத் தீர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் திரிபோலி மற்றும் ஆபிரகாம் லிங்கன் ஆகிய போர்க்கப்பல்களில் பணியாற்றும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவு குறித்து அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களுக்கு கப்பலில் கொடுக்கப்படும் சாப்பாட்டை புகைப்படங்களாக எடுத்து குடும்பத்தினருக்கு அனுப்பி வருவதும் அந்தச் சாப்பாட்டு தட்டில் மிகவும் சொற்ப அளவே உணவு இருப்பதும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. ஒரு சிறிய கரண்டி இறைச்சி மற்றும் ஒரே ஒரு tortilla மட்டுமே உணவாக வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
காய்கறிகள், பழங்கள் போன்ற புதிய உணவுகள் கிடைப்பதில்லை. வீரர்கள் தங்களுக்குள் உணவைப் பகிர்ந்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், காபி, பற்பசை, டியூடரண்ட் மற்றும் பெண்களுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின் போன்ற பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உணவுத் தட்டுப்பாடு வீரர்களின் மன உறுதியைப் பாதிக்கக்கூடும் என்று ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க மத்திய ராணுவக் கட்டளை இந்த நிலைமையைச் சமாளிக்க மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறது.

