இலக்கு மாறாத குறி.. அமெரிக்க ராணுவ வீரரைக் காலி செய்த ஈரான்.. அதிகரிக்கும் பதற்றம்!
மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அங்கு போர் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களாக அமெரிக்காவின் ஏவுகணைகள் ஈரானைத் தாக்கி வருகின்றன. அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்பிலும் கடுமையான தாக்குதல் நடைபெறுவது, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தவிர, மீண்டும் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் நடவடிக்கைகளால் பொருளாதாரப் பிரச்னைகளும் சீர்குலைந்துள்ளது. எண்ணெய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரானிய ஆளில்லா விமானம் திட்டமிட்டு வெடிக்கச் செய்ததில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள ராணுவத் தளத்தில் நடைபெற்றுள்ளது. மரணமடைந்த ராணுவ வீரர், சார்ஜென்ட் மைக்கேல் இம்மானுவேல் ஸ்விண்டன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் வட கரோலினாவைச் சேர்ந்த, கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி. வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவத் தகவல்களின்படி, ஸ்விண்டன் ஃபேட்வில் பகுதியைச் சேர்ந்த ஸ்விண்டன், கடந்த 2017-ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்துள்ளார். அவர் வடக்கு கரோலினாவின் ஃபோர்ட் பிராக் தளத்தைச் சேர்ந்த 55-வது வான் பாதுகாப்பு பீரங்கிப் படைப்பிரிவு, 108-வது வான் பாதுகாப்பு பீரங்கிப் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
அவர் பலியானது தொடர்பாக அவரது மனைவி மியா கொன்சாலஸ்-ஸ்விண்டன், “இதிலிருந்து நான் ஒருபோதும் மீள மாட்டேன், நீங்கள் வீட்டில் இருந்திருக்க வேண்டும். நீங்கள் திரும்பி வந்ததும் உங்களுக்காக எத்தனையோ திட்டங்கள் வைத்திருந்தோம், என் வயிறு குமட்டுகிறது” என வேதனையுடன் தெரிவித்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. முன்னதாக, கடந்த வாரம் ஜோர்டானில் ஈரானின் தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது ஸ்விண்டனின் மரணம் நிகழ்ந்துள்ளது. பிராந்தியம் முழுவதும் மோதல் விரிவடைந்து வரும் நிலையில் அமெரிக்க வீரரின் தொடர் மரணமும் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

