அமெரிக்கா | நிறைவேறிய மசோதா.. முடங்கிக் கிடக்கும் அரசு நிர்வாகத்திற்கு விரைவில் தீர்வு!
அமெரிக்க அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியது.
அமெரிக்க மத்திய அரசு, அதன் செயல்பாடுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் மூலம் நிதி ஒதுக்கீடு பெற வேண்டும். அமெரிக்காவில் நிதி ஆண்டு அக்டோபர்1 முதல் தொடங்கும். எனவே, அதற்குள் நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று நிறைவேற்ற வேண்டும். ஆனால், இந்த முறை நிதி ஒதுக்கீட்டில் ஆளும் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயக் கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. அதாவது, அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின மசோதாவுக்கு இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக, 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசின் செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படும். இந்த நிலையில், முந்தைய அதிபர் ஒபாமா கொண்டு வந்த மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கான அரசு மானியங்கள் டிசம்பருக்குள் முடிவடைகிறது. இதை நீட்டிக்க ஜனநாயக கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதை ட்ரம்ப் ஏற்க மறுக்கிறார். இதனால் மசோதாவை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்தது. இதன் காரணமாக அரசு துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும், அரசு நிர்வாகமும் முடங்கியது.
அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு முடக்கத்தில் இருந்தது இதுவே முதன் முறையாகும். மறுபுறம், அரசு முடக்கத்தால் விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது; ஐஆர்எஸ் கிட்டத்தட்ட பாதி ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதுபோக, 1 மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறார்கள். சுமார் 6,00,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது தவிர, பல லட்சம் பேர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில், அரசு நிர்வாகம் முடங்கி 41 நாட்கள் ஆகியுள்ளது. நடந்து முடிந்த மேயர் மற்றும் மாகாண தேர்தலில் குடியரசு கட்சி தோற்றதற்கு அரசு முடக்கமே காரணம் என கருதிய ட்ரம்ப், அம்முடக்கத்தை விரைவில் நீக்க விரும்பினார். இதற்கிடையே, வரலாற்றிலேயே மிக நீண்ட கால அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, குடியரசுக் கட்சியினர் கொண்டுவந்த செலவு மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியது.
8 ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் செலவின மசோதாவுக்கு ஆதரவளித்ததன் மூலம் செலவின மசோதா செனட் சபையில் மசோதா நிறைவேறியது. இதைத் தொடர்ந்து, செலவின மசோதா அடுத்து பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டு அங்கு நிறைவேற்றப்படும். அதன்பிறகு அதிபர் ட்ரம்ப் அதற்கு ஒப்புதல் அளிக்கும்போது, அரசு நிர்வாகம் முடக்கம் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

