முடங்கிக் கிடக்கும் அமெரிக்க அரசு நிர்வாகம்.. ரூ.62 ஆயிரம் கோடி இழப்பு!
அக்.1 அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60% உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காததால் நிதி மசோதா தோல்வியடைந்தது. இதன் காரணமாக அரசுத் துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவின் அரசு நிர்வாக செலவீனங்கள் தொடர்பான மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இந்த மசோதா மூலமாகத்தான், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் நிதிக்கு அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில், அமெரிக்காவின் மேலவையான செனட் அவையில், செலவீனங்களுக்கான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின மசோதாவுக்கு இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசின் செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படும். ஆனால், அக்.1 அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60% உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காததால் நிதி மசோதா தோல்வியடைந்தது. இதன் காரணமாக அரசு துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.
மேலும், அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி கடந்த அக்டோபர் 1 முதல் மூடப்பட்டது. 31 நாட்களாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கும் நிலையில், 7 பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் ரூபாய் 62 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் மேலும் 6 வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும் 8 வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். 1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணி நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த சமயம் 2018-19ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

