\
Ban on International Criminal Court
Ban on International Criminal CourtReuters

நீதிமன்றத்துக்கே தடை விதித்த ட்ரம்ப்.. நோபல் பரிசு காரணமா.. நீதிமன்றம் இயங்குவதில் சிக்கல்!

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காத அதிருப்தியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடை விதித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.
Published on: 

உலகின் மிகக் கொடூரமான சர்வதேசக் குற்றங்களை விசாரிக்க உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court - ICC) 120-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். எனினும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் இஸ்ரேல் போன்ற உலகின் முன்னணி நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை என்பதால் பலவீனமான அமைப்பாகவே இது கருதப்படுகிறது.

இந்த நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான நவநீதம் பிள்ளைக்கு நேற்று அமைதிக்கான நோபல் பரிசு (Nobel Peace Prize) அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முழுமையான பொருளாதாரத் தடை விதித்து ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Navaneedham PIllai
Navaneedham PIllaiReuters

இந்த தடை காரணமாக உலகளாவிய வங்கி பரிவர்த்தனைகள், விசா/மாஸ்டர்கார்டு உள்ளிட்ட கார்டு சேவைகள் மற்றும் காப்பீட்டுச் சேவைகளைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் அணுகமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்க வீரர்கள் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் அமெரிக்க எல்லையைப் பாதுகாக்கும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்க காரணமாக இருந்த 'ரோம் ஒப்பந்தத்தில்' (Rome Statute) கையெழுத்திடவில்லை என்பதால், அதற்கு அமெரிக்கக் குடிமக்கள் அல்லது இராணுவத்தினர் மீது விசாரணை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும், இது அமெரிக்க நாட்டின் இறையாண்மையில் தலையிடும் செயல் என்றும் கூறப்பட்டுள்ளது.

International Criminal Court - ICC
International Criminal Court - ICCReuters

ஆனால், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தியும், அவருக்கு வழங்காமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டதே இந்த தடைக்கு காரணம் என சமூக வலைத்தளத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு பாலஸ்தீனப் பகுதியில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இஸ்ரேல் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. மேலும் உக்ரைன் விவகாரத்தில் புதினுக்கும் பிடியாணை பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Ban on International Criminal Court
அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு கிடைக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com